வேடசந்தூரில் பொதுமக்கள் போராட்டம்- இழுத்து மூடப்பட்டது மதுபான கடை!

tasmacவேடசந்தூர்: வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் அரசு மதுபான கடை இழுத்து மூடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 4 மதுபான கடைகள் இயங்கி வந்தன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த கடைகள் மூடப்பட்டன.

பின்னர் சட்டவிரோதமாக மதுபான விற்பனை வேடசந்தூரில் களைகட்டியது. இந்நிலையில் கருக்காம்பட்டியில் மதுபான கடை அமைக்கப்பட்டது.

இந்த கடைக்கு எதிரே தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் கோவில் உள்ளது. கருக்காம்பட்டி குடியிருப்புக்குள் மதுபான கடையை அமைத்ததற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் வேடசந்தூர் தாசில்தார் தசாவதாரம் மதுபான கடையை மூட உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

tamil.oneindia.com

TAGS: