தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணடிக்கும் அதானி நிறுவனம்- கொதிப்பில் ராமநாதபுரம் மக்கள்

adani

ராமநாதபுரம்: வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் நீராதாராத்தை மேலும் உறிஞ்சும் வகையில், கமுதியில் உள்ள அதானி குழுமம் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதானியின் சூரிய மின்சக்தி நிலையத்தில் தகடுகளை கழுவ தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்பட்டு வீணடிக்கப்படுகிறது என்பதால் கமுதி மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சாயல்குடி சாலையில் உள்ளது அதானி குழுமத்தின், கவுதம் அதானிக்கு சொந்தமான 648 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம். இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை திட்டமான இதனைக் கடந்த ஆண்டு, வீடியோ கான்பரன்சிங் மூலம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கமுதி பகுதியில் செங்கப்படை, செந்தனேந்தல், தாதாகுளம், குண்டுகுளம், சொக்கலிங்கபுரம், ஒழுகுபுளி, புதுக்கோட்டை, தோப்படைப்பட்டி, ஊ.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ரூ.4,536 கோடி மதிப்பீட்டில் அமைந்துள்ள இத்திட்டத்திற்காக 2,500 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கையகப்படுத்தப்பட்டு, 648 மெகா வாட் சூரிய மின்சக்தி நிலையம் அமைந்தது. இந்த நிறுவனத்தின் தேவைக்காக நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வறட்சியால் திண்டாடும் ராமநாதபுரம் மாவட்டம், தற்போது மேலும் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. இதனால் வரும் 29ம் தேதி கமுதியில் மக்கள் பெரிய அளவுக்குப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: