திராவிட இயக்கங்களின் அடுத்த பரிணாமம்தான் தமிழ்த் தேசிய இயக்கங்கள்

naam-tamilar3நான் ஒரு தமிழ்த் தேசியவாதி. தமிழகத்தில் தமிழ்த் தேசிய பொதுவுடைமை மலர வேண்டும் என்று நினைப்பவன். சமீபத்தில் சில தமிழ்த் தேசிய நண்பர்கள் திராவிடமே தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்ற கருத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. திராவிட இயக்கத்தை வழிநடத்திச் சென்ற தலைவர்களில் ஒரு சிலரிடம் குறைபாடுகள் இருக்கலாம். அதை வைத்து திராவிட இயக்கமே தமிழர்களுக்கு எதிரானது என்ற கருத்தை உருவாக்கி விடக்கூடாது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளையே தவறு என்று எண்ணிவிடக்கூடாது. வரலாற்றை உற்றுநோக்க வேண்டும்.

“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற குரலோடு உதயமானதுதான் தென்னிந்திய நல உரிமைச்சங்கம். பிராமணர் அல்லாதார் நலனை காக்க புறப்பட்டதுதான் நீதிக்கட்சி. அரசு உத்தியோகங்களில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற கொள்கையை முன் வைத்து, ஆரிய கலாச்சார பண்பாட்டு மொழித் திணிப்பை உறுதியாக எதிர்த்து நின்றதுதான் பெரியார் உருவாக்கிய திராவிட  கழகம். தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும். தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோட்பாட்டு அடிப்படையில், தொழிலாளர் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்யவில்லை யென்றால் தமிழர் இன, மொழி, பண்பாட்டு அடையாளமே நமக்குத் தெரியாமல் போயிருக்கும்.

1967-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த திராவிடர் இயக்கம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது என்றால் அதற்கு மக்களின் ஆதரவுதான் காரணம். தாழ்த்தப்பட்டோரின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் முன்னேற்றம், மே தின முழக்கம், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகபட்சமாக 69% இட ஒதுக்கீடு, கிறித்துவம், இஸ்லாம் போன்ற சிறுபான்மை மதங்களுடன் நல்லுறவு போன்றவற்றில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது.

காங்கிரஸ் இயக்கம் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் இயங்கியபோதும், தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் கல்விப்புரட்சி நடந்தது என்பது உண்மையானாலும், அது காமராஜரால் நடந்த நன்மைதான். இயக்கத்தால் நடந்த நன்மை என்று சொல்ல முடியாது. அதே போல பொதுவுடைமைவாதிகளும், தீண்டாமை, தொழிலாளர் முன்னேற்றம் போன்ற சமூக மாற்றங்களுக்குப் பாடுபட்டிருந்தாலும் அது மனிதநேய செயல்பாடாக இருந்தது. தமிழர், இனம், மொழி தொடர்பான போராட்டமாக அமையவில்லை. திராவிட இயக்கம் மட்டுமே முழுக்க, முழுக்க தமிழுக்கான இயக்கமாக செயல்பட்டது. அதுவே அதன் வெற்றிக்கு வழி வகுத்தது.

ஒரு இயக்கம் பல ஆண்டுகள் ஆளும்கட்சியாக இருக்கும்போது, பலவீனங்கள் உருவாவது இயற்கையே. திராவிட இயக்கங்களின் ஆட்சிக்காலத்தில் லஞ்ச லாவண்யமும், அரசியல்வாதிகள் தலையீடுகளும் எல்லா துறைகளிலும் அதிகரித்துள்ளன என்பது கண்கண்ட உண்மை.  தமிழ்நாட்டின் ஆதாரமான விவசாயம், தொழிற்துறை, கல்வி போன்றவற்றில் நீண்டகால திட்டங்களை வகுக்காமல் வேலைவாய்ப்பை பெருக்கலாம். அன்றைய பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வு சொல்லி, வெறும் இலவசங்களை மட்டும் நம்பி வாழ்கிற மக்களாகவும், குடிக்கு அடிமையானவர்களாகவும் தமிழர்கள் ஆக்கப்பட்டது திராவிடர் இயக்கங்கள் ஆண்ட காலகட்டத்தில்தான் என்பதை மனசாட்சி உள்ள எல்லாரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு சட்டப்படி வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுக்கிறது. 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு  கட்டி, பாலாற்றுப் படுகை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழடித்துவிட்டது. இத்தனை கொடுமைக்கு அப்பால், தஞ்சாவூர் படுகையில், மீத்தேன் எரிவாயு எடுத்து தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியும் நடக்கிறது.

மத்திய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருத, இந்தித் திணிப்பு தங்கு தடையின்றி நடைபெறுகிறது. போதாததற்கு நீட் தேர்வு என்று பல சதித்திட்டங்கள் தமிழர்களை சுற்றி நடந்துகொண்டிருக்கிறது. அது தமிழ்த் தேசியவாதிகளை தமிழ், தமிழினம், தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறை உள்ள இளைஞர்களை, மாணவர்களை வெகுவாக பாதித்திருக்கிறது. அந்த பாதிப்பின் எதிரொலிதான் திராவிட இயக்கங்களை தமிழர்களின் எதிராளிகளாக நினைக்க வைத்திருக்கிறது ஒரு சிலரை.

நம்மிடம் இருந்த கச்சத்தீவை பறிகொடுத்திருக்காவிட்டால், நம் மீனவர்கள் மீன் பிடிக்க வழியில்லாமல் சிங்களவனின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகும் அவசியம் இருந்திருக்காது. திராவிட இயக்கங்கள் ஓரணியில் இருந்து போராடியிருந்தால் இலங்கையில் தனித்தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். இதற்கான பதிலை திராவிட இயக்கங்கள் சொல்லியே ஆகவேண்டும்.

அதே நேரத்தில் எல்லா குறைகளையும் திராவிட இயக்கங்கள் மீது போட்டு தப்பித்து விட முடியாது. இதில் தேசிய இயக்கங்கள் பங்கு மிகமிக அதிகம். காங்கிரசும், பா.ஜ.கவும் இலங்கைத் தமிழர் விஷயமாகட்டும், கச்சத்தீவு விஷயமாகட்டும், மொழிக் கொள்கையாகட்டும் ஒரே மாதிரியாகவே சிந்திக்கின்றன. அவர்கள் தேசிய கட்சியாக இருந்தாலும், தங்களை வட இந்தியர்களாகவே நினைக்கிறார்கள். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆள்கிறது. பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருக்கிறது. இருவரும் ஒற்றுமையாக தண்ணீர் தர மறுக்கிறார்கள். அதை தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசும், பா.ஜ.க.வும் தட்டிக்கேட்க முடியவில்லை. அதேபோல கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆள்கிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால் முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த ஒற்றுமையோடு மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பொதுவுடைமை இயக்கங்களால் தட்டிக் கேட்க முடியவில்லை. இந்த தேசிய இயக்கங்களை எதிர்த்து திராவிட இயக்கங்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்பவில்லை. அதற்குப் பதில் தேசிய கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொள்வதும், உறவை பலப்படுத்துவதில் அக்கறை காட்டுவதுமாக இருக்கிறார்கள்.

திராவிட இயக்கங்கள் தமிழ்த் தேசியவாதிகளை தனது போட்டியாளராக பார்க்காமல், திராவிட இயக்கங்களின் அடுத்த பரிணாமம்தான் தமிழ்த் தேசிய இயக்கங்கள் என்பதை உணர்ந்து அவர்களை அரவணைத்து, அவர்களின் எண்ணங்களை உள்வாங்கி, அவர்களோடு ஒன்றுபட்டு செயல்பட்டால், தமிழ்நாட்டில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு வட இந்திய ஆதிக்கமற்ற முழு சுயாட்சியுடன் கூடிய ஒரு தமிழகத்தை நாம் உருவாக்க முடியும். திராவிடம் என்பது தென்னிந்திய ஆரியர்களைக் குறிக்கும் ஒரு சொல். ஆனால் தமிழ் தேசியம் என்பது, தமிழர்களை அடையாளப்படுத்துவதற்கு தானாகவே உருவான ஒரு சொல்லாகும். தமிழ்த் தேசியம் என்பது ஏதோ 20-ஆம் நூற்றாண்டில் உருவான அரசியல் கருத்து என்று நினைத்து யாரும் ஒதுக்கிவிட முடியாது.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, திராவிட அரசியலை விட முந்தியது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம் எப்போது உருவானதோ, அப்போதே தமிழ்த் தேசிய அரசியல் உருவாகிவிட்டது. கிட்டத்தட்ட மூவாயிரம் வருடங்களுக்கு முன்னால் (புராண காலத்தில்) இந்தியாவை சமஸ்கிருதம் ஆள்வதா, தமிழ் ஆள்வதா என்ற போட்டி உருவானபோது, ஆரிய கலப்பால் உருவான வடமொழியை விட தொன்றுதொட்டு வந்த தமிழ்மொழியே இந்தியாவை ஆள வேண்டும் என்ற அடிப்படையில் உருவானதுதான் முதல் தமிழ்ச்சங்கம். பாண்டிய மன்னர்களே சங்கப்புலவர்களாக இருந்து தமிழை வளர்த்து, தமிழ் எல்லையை வகுத்து, தமிழ் மருத்துவம், தமிழர் அறிவியல், தமிழர் சமயம் (சைவம், வைணவம், முருக வழிபாடு) என்று எல்லா துறைகளுக்கும் அடித்தளமிட்ட காலம். அடுத்து சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல் கொண்டுவந்து கண்ணகிக்கு கோயில் கட்டியது, கரிகாலன் கல்லணையை கட்டியது, உலகம் முழுவதும் கப்பலில் சென்று வணிகம் செய்தது, இராஜராஜசோழன் இலங்கை சிங்களவர்களை வென்று தமிழர்களை பாதுகாத்தது, தஞ்சையில் கோயில் கட்டியது போன்ற நிகழ்வுகளும் தமிழ்த் தேசியத்தின் வரலாறுகளே.

தமிழ்த் தேசியம் என்பது 9 கோடி மக்களின் உயிர்மூச்சாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய பிரதிபலிப்பே மெரினா புரட்சி. “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்று முழங்கிய முழக்கம் உலகமெல்லாம் ஒலித்தது.

“தமிழ்நாடு தமிழருக்கே’, “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்…’, “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’…போன்ற திராவிட இயக்க தத்துவங்கள் நிச்சயம் ஒருநாள் தமிழ்த் தேசிய எழுச்சியின் மூலம் முழுமையடையும். வெற்றியடையும். ஒரு காலத்தில் பெரியாருக்கும், அண்ணாவிற்கும் சில கொள்கைகளில் மாறுபட்ட கருத்து இருந்தாலும்… “தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து செயல்படும்’ என்றார் அறிஞர் அண்ணா. அது அப்படியே நடந்தது. இப்போது திராவிட இயக்கங்களும், தமிழ்த் தேசியவாதிகளும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டால், தேசிய இயக்கங்கள் கூட தமிழர்களின் உணர்வை புரிந்து கை குலுக்கும் காலம் விரைவில் வரும். தமிழனாய் இருப்போம். உழைப்பால் உயர்வோம்!

-nakkheeran.in

TAGS: