சரக்கு, சேவை வரி விதிப்பு திட்டமிட்டபடி 1–ந்தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை கொண்டு வரப்படுகிறது. சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஏற்ப 5, 12, 18, 28 என நான்கு விதமான வரிகளுக்கு இதில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. வருகிற (ஜூலை) 1–ந் தேதி முதல் இந்த வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இதனிடையே மத்திய அரசிடம் போதிய தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லை எனவும், இதனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்துவது தள்ளிப் போகும் எனவும் தகவல்கள் வெளியானது. இதை மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நேற்று திட்டவட்டமாக மறுத்தார். அவர் இதுபற்றி கூறுகையில், ‘‘இதில் துளியும் உண்மை இல்லை. இது முழுக்க முழுக்க வதந்தி ஆகும்’’ என்றார்.
மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மென்மையான முறையில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. எனவே திட்டமிட்டபடி ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலுக்கு வரும். இதில் எந்த மாறுதலும் இல்லை’ என்று கூறப்பட்டு உள்ளது.
-dailythanthi.com

























