இந்த ஆண்டும் தென்மேற்கு பருவ மழை குறைவுதான்.. தமிழகம் இனி என்னவாகும்? விவசாயிகள் அதிர்ச்சி

rain44சென்னை: வானிலை மையம் அறிவித்தது போன்று கடந்த மே மாதம் 31ம் தேதி தென் மேற்கு பருவமழை பொழியத் தொடங்கியது.

சென்ற ஆண்டுதான் பருவமழை சரியாக பொழியாமல் விவசாயிகளை பழிவாங்கிவிட்டது. இந்த ஆண்டாவது நன்றாக மழை பெய்து விவசாயம் சிறப்புறும் என்று விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

அதற்கேற்ப, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வார காலமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. என்றாலும் அது சராசரியைவிட குறைவாகவே உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

20 நாளில் சராசரியை விட குறைவு..

தென் மேற்கு பருவ மழை தொடங்கி 20 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், சராசரி அளவைக் காட்டிலும் குறைவான மழையே பதிவாகியுள்ளது.

மைசூரில்..

ஜூன் 17ம் தேதி நிலவரப்படி மைசூர் பகுதியில் 47 மி. மீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 24 மி. மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது சராசரியைவிட 50 சதவீதம் குறைவானதாகும்.

கேரளாவில்..

அதேப் போன்று கேரள நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை கணிசமாக குறைந்துள்ளது.வயநாடு பகுதிகளில் 296 மி.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் அங்கு 147 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

தமிழகத்தில்..

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 77 மி.மீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 67 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது சராசரியைவிட 13 சதவீதம் குறைவாகும்.

கை கொடுக்காத அணைகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைத்தான் மழையை கொடுக்கும். என்றாலும் தென்மேற்கு பருவ மழை பொழிந்தால்தான் கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள அணைகள் நிரம்பும். அந்த அணைகள் நிரம்பினால்தான் தமிழக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.

விவசாயிகள் அதிர்ச்சி

தென் மேற்கு பருவ மழை குறைந்துள்ள தகவல் விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டே பருவ மழை பொய்த்துப் போனதால் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுதல்

எனினும் வானிலை ஆய்வு மையம் ஆறுதலான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறது. அதாவது, இரு தினங்களுக்கு பின்னர் தென் மேற்கு பருவ மழை பலமடைந்து கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது.

tamil.oneindia.com

TAGS: