இந்தியாவில் குறைந்து வரும் மழைமேகங்கள்… ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

rain-chennaiடெல்லி: இந்திய வளிமண்டலவியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த 50 ஆண்டுகளில் மழை மேகங்களின் அடர்த்தி இந்தியாவில் குறைந்து கொண்டே வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் அந்த ஆய்வறிக்கையில், 1960ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.45 சதவீதம் அளவுக்கு மழை மேகங்களின் அடர்த்தி குறைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியா முழுவதும் பெய்யும் மழையின் அளவு, ஆண்டின் சராசரி அளவில் 1.22 சதவீத அளவு குறைந்துள்ளது என்றும் வளிமண்டலவியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையான பருவத்தில்தான் 70 சதவீத மழை மற்றும் பனிப்பொழிவுகள் உண்டாகின்றன. மழை மேகங்களின் அடர்த்திக் குறைவதால் பருவமழை காலத்திற்குமான நாட்களும் நிலையான அளவில் தொடர்ச்சியாகக் குறைந்து கொண்டே வருகிறது.

ஒரு முழு மழை நாளை இழந்துவிட்டோம்

“இந்தியாவில் மேகங்களின் தன்மை குறித்து மேற்கொண்ட ஆய்வு இதுதான். ஏற்கெனவே எல்லா பகுதிகளிலும் சராசரியாக ஒரு முழு மழை நாளை நாம் இழந்துவிட்டோம். இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை” என்று எச்சரிக்கிறார் ஓய்வு பெற்ற இந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சியாளர் ஏ.கே. ஜாஷ்வால்.

அதிகபட்ச வெப்பநிலை உருவாகும்

குறைவான மேகங்களின் அடர்த்தி மற்றும் படிப்படியாக குறைந்து வரும் மழை நாட்களின் எண்ணிக்கை இவை இரண்டுக்கும் வலுவான தொடர்பு ஒன்று உண்டு. இவை பருவநிலை மாற்றத்துக்கு வழி உண்டாக்கி, அதிகபட்ச அளவு வெப்பநிலையை ஏற்படுத்திவிடும் ஆபத்துள்ளது.

50 ஆண்டுகளாக குறைந்த மழை

ஆண்டு ஒன்றிற்கு இந்தியாவுக்குத் தேவையான 70 சதவீதம் நீர்வளம் பருவமழை காலத்தில்தான் கிடைக்கிறது. அது கடந்த 50 ஆண்டுகளில் குறைந்து கொண்டே வந்துள்ளது என்பது கவலையளிக்க கூடிய விஷயமாகும்.

காணாமல் போன மழை

கடந்த 1961ம் ஆண்டில் 46.7 சதவீதமாக மழையின் அளவு இருந்தது. அதுவே கடந்த 2009ம் ஆண்டில் 33.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என்கிறது ஆய்வறிக்கை.

கங்கை மட்டும் தப்பித்துள்ளது

இந்தியாவில் கங்கை நதி பகுதிகளில் மேகங்கள் அடர்த்திக் கூடியிருந்தாலும் நாட்டின் மற்ற பகுதிகளில் மழைமேகங்களின் அடர்த்தி குறைந்து கொண்டேதான் செல்கிறது. அதனால் இந்த மாற்றங்கள் குறித்து எல்லா நகரங்களிலும் தனி தனியாக ஆய்வாளர்கள் இப்போது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேகங்களால் சூழப்பட்ட பூமி

பூமியின் மேற்பரப்பானது 60 சதவீத மேகங்களால்தான் சூழப்பட்டுள்ளது. சூரிய ஒளியை பிரதிபலிப்பது போன்ற வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு இந்த மேகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர் ஆவியாகி மறுசுழற்சி நடக்கவும், மழை மற்றும் பனியை உற்பத்தி செய்வது, வெளிச் செல்லும் நீளமான கதிர்வீச்சுகளை தடுப்பது என உலகம் முழுவதும் உள்ள ஆற்றல்களை சமநிலையில் வைக்க மேகங்கள் உதவுகின்றன.

மண்ணுலகைக் காப்பது மேகமே

இன்றைய சூழ்நிலையில், அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ‘கிரீன் ஹவுஸ் வாயு’ மற்றும் ‘இன்றா ரெட்’ ஒளிக்கதிர் போன்றவை வளிமண்டலத்தை பாதிக்காமல் இருக்க மேகங்கள்தான் தடைகளை ஏற்படுத்தும் . எனவே தற்போது மேல்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் மண்ணுலகையும் பாதிக்கக் கூடியதாக அமையும்.

பருவமழையை சார்ந்தே விவசாயம்

இந்தியாவின் வேளாண்மை முழுக்க பருவமழையை நம்பியே இருக்கிறது. அதனால்தான் மழைப் பொய்த்தால் விவசாயம் பெரிய இழப்பை சந்திக்கிறது. விவசாயிகள் தற்கொலையும் நீள்கிறது.

அறிவியல் ரீதியாக நடவடிக்கை

அதனால் மழை மேகங்களின் அடர்த்தியை அதிகரிக்கும் வழிகளை அரசுகள் அறிவியல் ரீதியில் மேற்கொள்ள வேண்டும். அதுதான் இப்போதைக்கு தேவை.

tamil.oneindia.com

TAGS: