மறையாத வடுக்கள்.. கிடைக்காத நீதி.. 25 ஆண்டுகளாக தொடரும் துயரம் வாச்சாத்தி

vachathiதர்மபுரி: வாசாத்தி மக்களுக்கு மறைக்க முடியாத மாதம் ஜூன். அதிலும் 20 முதல் 22ம் தேதி வரை நடத்த வன்கொடுமைகள் நிழலாடிக் கொண்டே இருக்கும் துர்க்கனவுகள்.

25 ஆண்டுகள் கடந்த நிலையில் வாசாத்தி மக்களுக்கு நீதி கிடைத்ததா? தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகில் உள்ள பழங்குடி கிராமம் வாசாத்தி.

1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி கிராமத்திற்குள் காட்டுமிராண்டிகள் போன்று நுழைந்தனர் வனத்துறையினர். இவர்களுடன் கூட்டுக் களவானிகளாக காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் இணைந்தனர். ஒவ்வொரு வீடாக புகுந்து சந்தனக் கட்டை கடத்தியதாக 90 பெண்கள் 98 சிறுவர்கள், 15 ஆண்கள் என 133 பேரை கொத்தாக பிடித்து இழுத்துச் சென்றனர்.

பாலியல் வன்கொடுமை

சொல்லி மாளாத அளவிற்கு துன்பங்களை ஏற்படுத்தினர் அந்த அதிகாரிகள். அழைத்துச் சென்ற பெண்களில் 18 பேரை பாலியல் வன்கொடுமை ஆளாக்கினார்கள். இரவு முழுக்க வனத்துறை அதிகாரிகளால் அந்த பெண்கள் பட்டபாடு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

சூறையாடப்பட்ட வீடுகள்

அதுமட்டுமா அந்த கிராமத்தில் இருந்த பழங்குடியினரின் வீடுகள் சூறையாடப்பட்டன. இயற்கைச் சீற்றம் வந்த பின்னர் கூட ஏதாவது ஒரு வீட்டில் மிச்சம் ஏதாவது பயன்படுத்த ஒதுங்கி இருக்கும் என்பார்கள். ஆனால் மனிதர்கள் நடத்திய இந்த வேட்டையில் ஒன்றும் மிஞ்சமில்லை. உண்ண உணவு, உடை எதுவுமின்றி ஒரே நாளில் ஏதிலிகளாய் அவர்கள் நின்றார்கள்.

புகார் பதிய பல போராட்டங்கள்

வனத்துறையினர், காவல்துறையினர் என 29 பேர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். பல போராட்டங்கள் அவர்களால் நடத்தப்பட்டன. ஆனால் வழக்கு பதியப்படாமல் அலைகழிக்கப்பட்டனர் இந்த வாயற்றவர்கள்.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு

1992ம் ஆண்டு இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் நல்லசிவம் எம்பி எழுப்பிய பின்னரே, பிரச்சனை தீவிரம் அடைந்தது. அதன் பின், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இழப்பீடு

2011ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 1 கோடியே 24 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் 62 லட்சம் ரூபாய் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விடியாத வாழ்க்கை

இந்தச் சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்து விட்டாலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு இன்னும் உரிய நீதி கிடைக்கவில்லை. நீண்ட காலம் கழித்து நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகை கூட சென்று சேரவில்லை என்றால் யாரிடம் முறையிடுவது நாங்கள் என்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் இருக்கிறது? மவுனத்தைத் தவிர…

tamil.oneindia.com

TAGS: