பாலியல் வனகொடுமையிலிருந்து பெண் குழந்தைகளை காப்பாற்ற முதன்முறையாக காவல்துறை மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து பணியாற்றும் “உதயம்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க பல சட்டங்கள் உள்ளன. இருப்பினும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகர காவல்துறை மற்றும் யுனிசெப் நிறுவனம் சார்பில் உதயம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள உதயம் திட்டத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், மாநகர காவல் ஆணையாளர் சஞ்சய்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் விழாவில் உரையாற்றிய சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பத், பாலியல் தொல்லைகளில் மாணவிகள் யாரேனும் சிக்கினால், தயக்கமின்றி அதுகுறித்த புகார்களை தெரிவிக்க இனி பிரச்னைகள் இருக்காது என்று கூறி உதயம் திட்டத்தை தொடங்கிய மாநகர காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
புதிதாக தொடங்கப்பட்ட உதயம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கப்படும், பெண் குழந்தைகள் தயக்கமின்றி தங்கள் நிலைமையை கூறிட பிரத்யேக பெண் காவல் அதிகாரிகள் என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த திட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று மாநகர காவல் துறை துணை ஆணையாளர் ஜியோர்ஜி ஜார்ஜ் தெரிவித்தார்.
-lankasri.com