தமிழக மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்தால், 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தெரிவித்துள்ளார்.
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இலங்கையின் தென்பகுதியான திரிகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் 162 படகுகள் இலங்கை வசம் இருக்கிறது. அதில் முதல்கட்டமாக 40 முதல் 80 படகுகள் விரைவில் விடுவிக்கப்படலாம்.
மேலும் தமிழக மீனவர் கடலில் எல்லை தாண்டி வருவது தொடர்கதையாக உள்ளதாகவும், இனி இது போல் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாக சிறை பிடிக்கப்பட்டால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, அவர்கள் வந்த படகு உரிமையாளருக்கு 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், இது தொடர்பான சட்டத்தை வரும் 6 ஆம் திகதி நடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மீன்வளத்துறை தொடர்பான விவாதம் வருகிற 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com