கதிராமங்கலத்தில் 3வது நாளாக கடையடைப்பு- கொந்தளிப்பில் மக்கள்

kathiramangalamதஞ்சாவூர்: கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசார் 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பதித்த குழாய்கள் பழுதடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்களை நாசமாக்கி வருகின்றன. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் 7 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 30ம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.

அதிர்ச்சியும் பதற்றமடைந்த கிராமத்தினர் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், 9 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் சனிக்கிழமையன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடைப்பு ஏற்பட்ட ஆழ்துளை கிணற்றை முற்றுகையிட வந்த 75 பேரை போலீசார் கைது செய்தனர். 3வது நாளாக இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று மாலை கதிராமங்கலம், நருவேலி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, கச்சா எண்ணெய் கலந்ததால் கலங்கலான தண்ணீரை பொதுமக்கள் காண்பித்தனர். அதனை பார்த்த அவர், இப்பகுதியில் தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர், லாரி மூலம் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

எண்ணெய் கிணறு தோண்டுவதற்காக வந்த நிறுவனத்தினால் வயல்கள் பாலைவனமானதோடு, குடிநீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட வேண்டியுள்ளது. சுவையான ஆற்று நீர் குடித்த மக்கள் லாரி மூலம் விநியோகிக்கும் தண்ணீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: