பீஜிங்: இந்தியா மட்டுமல்ல, சீனாவும் 1962ம் ஆண்டு இருந்ததைவிட இப்போது வேறு மாதிரி நாடாகத்தான் உள்ளது என்று மிரட்டியுள்ளார் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர்.
சிக்கிம் மாநிலத்தில், இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுமே, எதிர்நாட்டு ராணுவம் அத்துமீறியதாக புகார் கூறி வருகிறது. இந்த நிலையில், 1962ம் ஆண்டு போரின்போது, சீனா இந்தியாவை வெற்றிகண்டதை சுட்டிக்காட்டி எச்சரித்தது சீனா.
இதற்கு பதிலளித்த, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி, 1962ம் ஆண்டில் இருந்த இந்தியா இதுவல்ல என்று பதிலடி தெரிவித்திருநதார்.
சீனா பதில்
ஜேட்லியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜெங் சுவாங் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியா 1962ல் இருந்ததை போல 2017ல் இல்லை என ஜேட்லி கூறியுள்ளது உண்மைதான். ஆனால் இந்தியாவை போல சீனாவும் மாறியுள்ளது.
ஒப்பந்தம்
1890ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா மதித்து நடக்க வேண்டும். எல்லையில் இருந்து தனது ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எச்சரிக்கை
சீனா தனது எல்லைகளை காத்துக்கொள்ளவும், தனது மதிப்பை நிலைநிறுத்திக்கொள்ளவும் அனைத்து வகை நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு ஜெங் சுவாங் எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.
நட்புக்கு தயார்
இந்தியாவுடனும், பூட்டானுடனும் சீனா நல்ல உறவை பராமரிக்கவே விரும்புகிறது. பூட்டானை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சீன எல்லைக்குள் இந்திய ராணுவம் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு ஜெங் சுவாங் தெரிவித்தார்.