ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 91-வது நாளாக 2-வது கட்ட போராட்டம்!

neduvasal66நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் இரண்டாவது கட்டப் போராட்டம் 91வது நாளாக நீடிக்கிறது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராம மக்கள் கடந்த ஏப்ரல் 12ம் முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். தினமும் பல்வேறு நூதன போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இன்று 91வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கிராமமக்கள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

அமைச்சரிடம் மனு

நேற்று நெடுவாசல் கிராம மக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தார். அப்போது நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனு அளித்தனர்.

அரசு அனுமதிக்காது

மனுவை பெற்று கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்றார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதுகுறித்து சட்டசபையில் உறுதியளித்திருப்பதாக அவர் கூறினார்.

91வது நாளாக நீடிப்பு

மேலும் நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் 91வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசுக்கு நெருக்கடி

நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் கிராமங்களில் அதிகரித்துவரும் போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகின்றது.

tamil.oneindia.com

TAGS: