தமிழக மீனவர்களுக்கு இதுவரை மறைமுகப் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி வந்த இலங்கை அரசு, இனி அதை நேரடியாகச் செய்வதற்காகப் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு கடல் தொழில் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்த சட்ட முன்வடிவு, மிக அபாயகரமான ஒரு சூழலில் தமிழக மீனவர்களைக் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறல் செய்யும் படகுகளுக்கும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு மீன்பிடிப்பவர்களுக்கும் 2 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்கிறது இந்தச் சட்ட முன்வடிவு.
இலங்கை அரசின் இந்தச் செயலைக் கண்டித்து, மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது குறித்து தமிழகக் கடலோர விசைப்படகு மீனவர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சேசுராஜ் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கைக் கடற்படையினரால் கடந்த மார்ச் மாதம், மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்துக்குப் பின், நமது எல்லைப் பகுதிக்கு உட்பட்ட 12 கடல் மைல் தொலைவுக்குள்தான் மீன் பிடிக்கிறோம்.
அப்படி இருந்தும், கடந்த 10 நாட்களில் ஐந்து முறை எங்கள் மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறையாக, இலங்கை அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வருகிறது. இது, 1974-ம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட கச்சதீவு ஒப்பந்தத்துக்கு எதிரானது.
இரு நாட்டு மீனவர்களையும் அச்சுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. மீன்பிடிக்கச் செல்லும் எங்கள் மீனவர்கள் உயிர், உடைமை என அனைத்தையும் இழந்திருக்கிறார்கள்.
பல கோடி ரூபாய் மதிப்புடைய 151 படகுகள் இலங்கையின் பிடியில் உள்ளன. இவற்றில் பல படகுகள் மீட்டுவர முடியாத நிலையில் பழுதாகி உள்ளன.
இந்த நிலையில், எங்களை மேலும் வதைக்க இப்படிச் சட்டம் போடுகிறது இலங்கை அரசு.
கடலுக்குச் செல்லும் மீனவர்களை நம்பி, இனி யாரும் கடன்கூட கொடுக்க மாட்டார்கள். மத்திய அரசு இதைத் தடுக்கக் குரல் கொடுக்காமல் மெளனமாக இருக்கிறது.
நாங்கள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும் என்றால், கச்சதீவை திரும்பப் பெற்று கடல் எல்லையை மறுவரையறை செய்து கொடுங்கள். இல்லையேல் எங்களைச் சாகவாவது விடுங்கள்’ என்பதை மத்திய அரசுக்கு வலியுறுத்தி, தீக்குளிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளோம்” என்றார் சேசுராஜ்.
நிரபராதி மீனவர் கூட்டமைப்பின்’ தமிழகப் பிரதிநிதி யு.அருளானந்தம் கூறுகையில்,
இந்திய மீனவர்களின் நலனுக்கு எதிரான இந்தச் சட்டம் குறித்து மெளனமாக இருப்பதன் மூலம், இந்திய அரசும் இலங்கைக்கு உடந்தையாக உள்ளதோ என நினைக்கத் தோன்றுகிறது என்கிறார்.
ஆசியப் பகுதியில் உள்ள ஜப்பான், சீனா, தென் கொரியா, தைவான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை என அனைத்து நாட்டு மீனவர்களுமே எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், இலங்கை மட்டும்தான் ஐ.நா-வின் கடல்சார்ந்த சட்ட உடன்பாட்டின் பிரிவு 73-க்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.
இந்தச் சட்டத்தின்படி, ஒரு நாட்டின் கடல் பகுதிக்குள் எல்லைதாண்டும் அடுத்த நாட்டைச் சேர்ந்த படகில் சந்தேகப்படும்படியான பொருள்கள் ஏதும் இல்லை எனில் அப்படகை விடுவித்து விடவேண்டும்.
மேலும் 145-ம் பிரிவின்படி, கடலில் மீனவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையை உருவாக்கக் கூடாது.
அதேபோல் இந்திய தண்டனைச் சட்டம் 25/1A படி, உயிர்பறிக்கும் ஆயுதங்களுடன் இந்தியக் கடல் பகுதிக்குள் யாரும் ஊடுருவக் கூடாது.
ஆனால், இந்தியக் கடற்பரப்பில் ஆயுதங்களுடன் நுழையும் இலங்கைக் கடற்படையினர், இந்திய மீனவர்களைத் தாக்குவதும், சிறைபிடித்துச் செல்வதும் அன்றாட நடவடிக்கையாக உள்ளது.
இதை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.
தூத்துக்குடி தொடங்கி காரைக்கால் வரையிலான கடற்பரப்பில் 3,600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் ஃபைபர் படகுகளும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான மீனவர்கள் உள்ளனர்.
எங்களுக்கு மாற்று வழியினை ஏற்படுத்தும் வரையிலாவது, இலங்கை அரசின் புதிய சட்டத்தை அமுல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்” என்கிறார் அருளானந்தம்.
தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் குறிப்பிடுகையில்,
1983-ம் ஆண்டு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தியிருந்தால் மீனவர் பிரச்னை இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது.
நமது மீனவர்களால் கடல்வளம் அழிவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியிருக்கவும் முடியாது.
மோடியின் செல்லப்பிள்ளையாகத் திகழும் இலங்கை அரசு, தன்னைத் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்றார்.
வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தன் சொந்த நாட்டு பிரஜைகளைச் சிக்கலில் இருந்து மீட்பாரா?
– Vikatan
மீனவர்கள் துயர் தீர உடனடியாக செய்ய வேண்டியவை இரண்டு .ஒன்று கடல் எல்லையை குறிப்பதற்ற்கு மீனவர்களுக்கு தெரியுமாறு மிதவைகளோ தூண்களோ இலங்கை கடல் எல்லையில் அமைக்க வேண்டும் . இரண்டாவது தமிழன் உணர்வை மதிக்காமல் தாரை வார்த்து கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும் . அதுவரை தமிழக மீனவர்கள் சுதந்திரமாக கச்சத்தீவு சென்றுவர இந்திய அரசு வழிவகுக்க வேண்டும்.