நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீர சந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான ஓவியங்களை உருவாக்கிய தமிழ்த் தேசிய சிந்தனையாளன் தூரிகை நெருப்பு ஓவியர் வீர சந்தானம் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
அவரின் மறைவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீர சந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது. 43 ஆண்டுகளாக தன் வாழ்வையே சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்காகவே அர்ப்பணித்தவர்.
நான் நெஞ்சால் பூசிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் எல்லையற்ற அன்பையும், மதிப்பையும் பெற்று அவருடன் உயிராகப் பழகியவர் நமது இலட்சிய ஓவியர். அதற்கான அனைத்து அறப்போராட்டங்களிலும் முன்நின்றவர். உடல் நலிந்த நிலையிலும் தமிழ்க்குலத்துக்காக வீர முழக்கம் எழுப்பியவர்.
தலைசிறந்த ஓவியர். ஆனால் அவர் கரம் பற்றிய தூரிகை தமிழின விடுதலைக்காகவே ஓவியங்களைத் தீட்டியது. முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு உயிரோவியங்களை வரைந்தார்.
நேற்று முன்தினம் காலையில் நெடுநேரம் என்னிடம் அலைபேசியில் உரையாடினார். அவரது மறைவு தமிழ் இனத்துக்கும், தமிழ் ஈழ மக்களுக்கும் ஈடு செய்யவே முடியாத இழப்பாகும்.
தமிழ் இன விடுதலைக்காக வாழ்ந்த அந்த ஒளிச்சுடர் அணைந்து விட்டது. அவரது இதய தாகமான இலட்சியங்களை நெஞ்சில் ஏந்துவோம்.
எனது ஆருயிர்ச் சகோதரன் ஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கத்தையும், பொங்கி வரும் கண்ணீரையும் அஞ்சலி ஆக்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-tamilwin.com