டெல்லி: இந்திய – சீன எல்லையில் நீடிக்கும் பதற்றத்துக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா, ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
சிக்கிம் மாநில எல்லையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தடுத்த இந்திய வீரர்களுடன் கைக்கலப்பில் ஈடுபட்டது.
இதனால் இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்களின் படை வீரர்களை குவித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து விவாதிக்க டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றக் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில் எதிர்கட்சிகளுக்கு எல்லை விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீன விவகாரத்தில் அனைத்துக்கட்சிகளின் நிலைப்பாட்டை அறிய மத்திய அரசு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.