டெல்லி: சீனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சீனா இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
சிக்கிம் எல்லையில் சீனா தொடர்ந்து குடைச்சலை கொடுத்து வருகிறது. சீன அரசு மீடியாவும் தொடர்ந்து இந்தியாவை சீண்டும் நோக்கத்திலேயே செய்தி வெளியிட்டு வருகிறது.
சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள சீனா, ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு குறி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சீனாவின் அடாவடிக்கு தீர்வு காண முடிவு செய்துள்ள மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
ராஜ்நாத் வீட்டில் நடைபெற்ற கூட்டம்
மத்திய அமைச்சர் ராஜ்நாத்தி சிங்கின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேருவுக்கு நம்பிக்கை துரோகம்
அப்போது டோக்லாம் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு பணியை தடுக்க இந்தியா ராணுவத்தை குவித்ததற்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முலாயம் சிங் சீனா முன்னாள் பிரதமர் நேருவுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாக கூறினார். மேலும் சிறப்பு பிரதிநிகளின் பேச்சுவார்த்தையையும் சீனா மீறுவதாக குற்றம்சாட்டினார்.
தீர்வுக்கு அமைதியாக இருக்க வேண்டும்
அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பிரச்சனைக்கு தீர்வுக்காண அமைதியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். முகம் சுளிக்க வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றார்.
கோபத்திற்கு என்ன காரணம்?
கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் தலைவர் சீத்தராம் யெச்சூரி தலாய்லாமா உடனான இந்தியாவின் கொள்கைகள் மற்றும் அமெரிக்கா ஜப்பான் உடனான ராணுவ கூட்டுப் பயிற்சி சீனாவின் கோபத்திற்கு காரணமா என அரசு கவனிக்க வேண்டும் என்றார்.
யர்த்திரீகர்கள் மீதான தாக்குதல்
மேலும் இந்தக்கூட்டத்தில் காஷ்மீர் மற்றும அமர்நாத் யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மற்றும் யெச்சூரி ஆகியோர் அமர்நாத் யார்த்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். பசு பாதுகாவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் குலாம் நபி ஆசாத் அப்போது வலியுறுத்தினார்.
ராஜ்நாத் சிங்குக்கு பாராட்டு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அமர்நாத் சம்பவத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராட்டியதோடு, இந்தத் தாக்குதலுக்கான கண்டனங்களை அடுத்து அம்மாநிலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
ஒப்பந்தத்தை ஏற்றாரா நேரு?
இதைத்தொடர்ந்து பேசிய வெளியுறவு செயலர் ஜெய்ஷங்கர் சிக்கிம்-திபெத்-பூட்டான் ஆகியவற்றின் சந்திப்பான டோக்லாம் சீனாவுடையது என 1890 ஆம் ஆண்டு பிரிட்டன்-சீனா உடன்பாட்டில் தவறாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதுதொடர்பாக 1959ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு எழுதிய கடித்ததில் 1890ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாகசீனா கூறுவதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு ஆதரவு
அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தியாவின் அணுகுமுறைக்கு வலுவான ஆதரவைக் காட்டியுள்ளன, மேலும் தேசிய ஒற்றுமைக்கான தேவையையும் வெளிப்படுத்தியுள்ளதாக இக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பூட்டானுக்கு ஆதரவு திரட்டும் அதே வேளையில், இந்தியா-பூட்டான் உறவுகளின் மிக நெருங்கிய மற்றும் நீண்டகால தனிப்பட்ட தன்மை அங்கீகரிக்கப்பட்டது, என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.