சென்னை: மத்திய மாநில அரசுகளின் செயல்படுகளும் கொள்கைகளும் மக்களின் நலனுக்கு எதிராக இருக்கும்போது பொதுமக்களில் சிலரே வெகுண்டெழுந்து போராட்டக்காரர்களாக உருமாறும் நிலை உருவாகிறது. அரசின் தவறான கொள்கைகளே சசிபெருமாள், டிராபிக் ராமசாமி போன்ற போராளிகளை உருவாக்குகிறது.
தமிழக அரசு, மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை நடத்தி வந்தது. தமிழக அர்சின் பிரதான வருமானமாக டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாயே இருந்தது. ஆனால், டாஸ்மாக்கில் தினமும் குடித்து, குடிக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
ஒரு குடும்பத் தலைவனின் வருமானத்தில் பெரும் பகுதி டாஸ்மாக் கடைக்கே சென்றது. இதனால் வருமான இழப்பு ஏற்பட்டது இல்லாமல், அவர்கள் குடிக்கு அடிமையாகி நோயாளிகளாக மாறினார்கள். குடிக்கு அடிமையாகி மரணமடைபவர்களில் எண்ணிக்கை உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிகம்.
சசிபெருமாள் போராட்டம்
ஆனால், அரசிடம் பலரும் டாஸ்மாக்கை மூட வேண்டும்; மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் காந்தியவாதி சசிபெருமாள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம்,உண்ணாமலை கடை என்னும் பகுதியில் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினார்.
உச்சநீதிமன்றம் மூடிய டாஸ்மாக் கடைகள்
ஆனால், அவரை போலீசார் செல்போன் கோபுரத்திலிருந்து கட்டாயப்படுத்தி இறக்கியபோது மூக்கிலும் உடலின் பல பகுதியிலும் இருந்து ரத்தம் வெளியேறி மரணமடைந்தார். போலீசாரின் அராஜகப்போக்கால் மரணமடைந்த சசிபெருமாளின் சாவுக்கு இதுவரை நீதிகிடைக்கவில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் 3321 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இது கூட சசிபெருமாள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி எனத்தான் கருத வேண்டும்.
அரசை எதிர்க்கும் டிராபிக் ராமசாமி என்னும் தனிமனிதன்
அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து தளராது போராட்டம் நடத்தி வருகிறார் 80 வயதைக் கடந்த டிராபிக் ராமசாமி. சாலைகளில் பேனர் வைக்கத் தடை, மீன்பாடி வண்டிகளை பயன்படுத்த தடை என பல்வேறு விஷயங்களை எதிர்த்து தனிமனிதராகப் போராட்டம்ந் நடத்தினார். ஆனால் அதற்காக பலமுறை அவர் தாக்கப்பட்டார். குடும்பத்தை பிரிந்தார். ஆனால் இன்னும் பல போராட்டங்களைச் செய்து வருகிறார். எடப்பாடி அரசுக்கு எதிராக நேற்று கட்டிடத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.
தற்போது சுதந்திரப் போராட்டம் நடக்கிறதா?
இப்படி டிராபிக் ராமசாமி, சசிபெருமாள் மட்டுமில்லாது நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் ஒவ்வொரு பொதுமக்களும் போராளிகளாக உருவாகி வருகிறார்கள். ஆக, மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளும் திட்டங்களும் சசிபெருமாள்களையும் டிராபிக் ராமசாமிகளையும் சுதந்திரம் பெற்ற 70 ஆவது ஆண்டில் அதிக அளவு உருவாக்கிக்கொண்டிருக்கிறது.