சேலம்: மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகக் போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தார்.
இவர் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி சேலம் போலீசார் கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாணவி வளர்மதி மீது இன்று திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் சிறையில் இருந்து மாணவி வளர்மதியை கோவைக்குக் கொண்டு வந்துள்ள அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர் போலீஸார்.
மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வளர்மதியின் தாயார் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாங்கள் விவசாயக் குடும்பம். என் மகளும் விவசாயப் படிப்பு படிச்சிருக்கா. அதனால், விவசாயிகளுக்கு ஆதரவா போராடினாள்.
தினம்தோறும் எவ்வளவோ கொலை, கொள்ளைகள் இந்த நாட்டுல நடக்குது. பச்சைக் குழந்தைகளையே பலாத்காரம் பண்றாங்க. ரவுடிகள் நாட்டை நாசம் பண்றாங்க. இதை எல்லாம் அரசாங்கம் கண்டுக்கவில்லை. ஜனநாயக நாட்டில் விவசாயிகள் மீது எல்லாருக்கும் இருக்கும் உணர்வுதான் என் மகளுக்கும் உள்ளது. எனக்கும் அந்த உணர்வு உள்ளது. விவசாயிகளுக்காக மாணவர்கள் போராடும் போது நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.
வளர்மதி தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்கட்டும். ஆனால் விவசாயிகளுக்காக துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக நக்சலைட், தீவிரவாதி என முத்திரை குத்தி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். என் மகளின் எதிர்காலத்தை பாழக்கிவிட்டனர். விவசாயிகளுக்காகத் தான் என் மகள் போராடினாள். எங்களுக்கு வேண்டாதவர்கள் கூட தவறான தகவல் தரலாம். பொது மக்களும், மாணவர்களும் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-http://tamil.oneindia.com
https://youtu.be/u-HYoUOZHyc