ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கோரி மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 1991 மே 21-ம் திகதி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன.
இதையடுத்து, அவர்களை விடுவிக்கத் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில், வேலூர் சிறையில் 26 ஆண்டுகளாகத் தண்டனை பெற்று வரும் முருகன் ஏ.டி.ஜி.பி-க்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “26 ஆண்டுகள் சிறை வாழ்க்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, நான் ஜீவசமாதி அடைய முடிவெடுத்துள்ளேன்.
இதையொட்டி, வருகிற ஆகஸ்ட் 18-ம் திகதி முதல் நான் உணவு உட்கொள்ளப்போவதில்லை. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து, ஜீவசமாதி அடைய எனக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று முருகன் கொரிக்கை விடுத்துள்ளார்.
-lankasri.com