தமிழக விவசாயிகளுக்கு உதவ, அமெரிக்காவில் நடக்கிறது மொய் விருந்து!

சென்னை : வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் மொய்விருந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பருவமழை பொய்த்தது, நீர் வறண்டது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. நீரின்றி தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு போனதோடு, பயிர்களும் கருகி நாசமானதால் விவசாயிகள் பலர் மனகஷ்டத்திலும், பணக்கஷ்டத்திலும் தற்கொலை செய்து கொண்டனர்.

moi1

மொய்விருந்துக்கு ஏற்பாடு

தமிழகத்தில் கடுமையான பாதிப்பை கண்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் மொய் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மொய் விருந்து மூலமாக நன்கொடைகளைத் திரட்டி அதன் மூலமாக தமிழக விவசாயிகளுக்கு உதவ எய்ம்ஸ் அமைப்பு, வாஷிங்டன் தமிழ் சங்கம், தமிழ் பள்ளிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

moi2

சாண்ட்லியில் பாரம்பரிய விழா

இந்த நிகழ்வு வரும் 29-ஆம் தேதி சனிக்கிழமை சாண்ட்லி (CHANTILLY) பகுதியில் உள்ள ஃப்ரீடம் உயர்நிலைப் பள்ளியில் (FREEDOM HIGH SCHOOL) நடக்க இருக்கிறது. மொய் விருந்துநிகழ்ச்சியில் சைவ, அசைவ பாரம்பரிய உணவு பரிமாறப்பட உள்ளது.

உணவுக் கண்காட்சி

இதே போன்று சிறுதானிய உணவு வகைகளை பார்வையாளர்களே கொண்டு வந்து காட்சிபடுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாரம்பரிய சமையல் முறையை பிரதிபலிக்கும் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமிய கலைகள்

இது மட்டுமின்றி விருந்தோம்பல், கும்மிப்பாட்டு, நாட்டுப்புறக் கலைகள், உரி அடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் வசூலாகும் பணத்தை வைத்து விவசாயிகளுக்காக தொண்டாற்றி வரும் எய்ம்ஸ் அமைப்பு மூலம் நிதியுதவி செய்யப்பட உள்ளது.

tamil.oneindia.com

TAGS: