அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர்… நமக்கு அப்துல் கலாம்!

kalam

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம். இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர். அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா…..நெருங்குடா பாப்போம் என தெறிக்க விட்டவர்.

ஒரு பின் தங்கிய தீவுப்பகுதி, பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர். அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது. மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி அனுதாபம் தேடியவரில்லை, அவருக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு, தேசாபிமானம் மட்டுமே.

நவீன இந்தியாவில் விக்ரம்சாராபாய், ஜஹாங்கீர் பாபா, சதிஷ் தவான், சிதம்பரம் (ப.சிதம்பரம் அல்ல) போன்றோர் வரிசையில் மிக முக்கியமான பெயர் அப்துல் கலாம்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் யுத்தம் என்பது விண்வெளிக்கு மாறிற்று, செயற்கை கோள்களும், ஏவுகணைகளும்தான் ஒரு தேசத்தின் பாதுகாப்பினை நிர்ணயம் செய்தன. அது இல்லாத சமயத்தில் சீனா நமது முதுகில் குத்திய வஞ்சம் நடந்தது. உலக நாடுகள் எல்லாம் மிக ஏளனமாகப் பார்த்த இந்திய ராணுவ ஏவுகணைத் துறையையும், அதற்கு மிக பக்கபலமான விண்வெளி துறையும் உலகின் மிக முண்ணனி நாடுகளுள் ஒன்றாக மாற்றிய பெருமை அப்துல காலாமிற்கு உண்டு.

அவரது முதல் படைப்பே மிகச் சிறியரக ராணுவ ஹெலிகாப்டர், இறுதியாக கொடுத்தது (ஓய்வு பெற்றாலும் அவரின் வழிகாட்டல் உண்டு) இன்று உலகின், கவனியுங்கள், உலகிலே அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ், இன்று இந்தியாவின் பிரம்மாஸ்திரம். இன்று சீனாவின் தூக்கத்தை தொலைதுவிட்ட பாசுபதகணை.

1980வரை இந்தியாவிடம் சொல்லிகொள்ளும் ஏவுகணைகள் கிடையாது, ரஷ்யா நண்பன்தான் எனினும் சொல்லிதராது, அல்லது சொல்லிதர விடமாட்டார்கள். இந்திராவின் எழுச்சியான இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு பகுதி தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி அலுவலகம் என மாற்றபட்ட பின் அப்துல் கலாம் யுகம் உருவாகிறது.

பெரும் தோல்விகள், ஏராளமான அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டித்தான் அவரால் ஏவுகணை திட்டத்தை செயல்படுத்த முடிந்தது, காரணம் ஏவுகணை என்பது மிக மிக சக்தி வாய்ந்தது மட்டும் அல்ல பெரும் சிக்கல் வாய்ந்த நுட்பம். விமான அறிவும் விண்வெளி தொழில்நுட்ப அறிவும் நிரம்ப கலந்து இல்லாமல் அது சாத்தியமே இல்லை.

அக்னி, ப்ருத்வி, நாக், திரிசூல், ஆகாஷ் என வரிசையாக செய்து கொடுக்கும்பொழுது உலகம் ஆடத்தான் செய்தது, அக்னி நீண்ட தூர ஏவுகணை சீனாவிற்கானது என சொல்லித் தெரிவதில்லை, காரணம் தலாய்லாமா எனும் புத்த துறவியின் அடைக்கலமும், அருணாலச பிரதேச புத்த மடாலயமுமே நமக்கும் சீனாவுக்கும் தகராறுக்கு முதல் காரணம். யுத்தம் நடந்தது அதற்கே, இன்றுவரை சர்ச்சையும் அதற்கே. அந்த பிரச்சினையில் சீனாவை மிரட்ட உருவாக்கப்பட்டதுதான் அக்னி. நெருப்புடா.. எனும் அட்டகாசமான மிரட்டல், நிச்சயம் கலாம் கொடுத்தது.

ஆனால் பிருத்வி நடுத்தரமானது. அதன் தாக்கும் தூரத்தைக் கூட கணிக்காமல் ‘பிருத்வி’ என்ற பெயரை கேட்டதும் அலறியது பாகிஸ்தான். காரணம் பிருத்விராஜன் என்ற மன்னன் அக்காலத்தில் ஆப்கான் முஸ்லீம் கொள்ளையனுக்கு பெரும் எதிரி. (அந்த ராஜஸ்தான் மன்னனைக் குறிப்பிட்டு, அதாவது இதனை ராஜஸ்தான் எல்லையில் நிறுத்துவோம் என சொல்லாமல் சொல்லது இந்தியா. உடனே புறவாசல் வழியாக ஏதோ ஒரு மொக்கை ஏவுகனையை வாங்கி ‘கோரி’ (கோரி முகமது) எனப் பெயரிட்டு மகிழ்ந்து பாகிஸ்தான் (ஆனால் அது வேலை செய்யுமா என கூட தெரியாது). இன்றும் ஐரோப்பாவில் களவெடுத்து சீனாவிடம் கொடுத்து,1950 மாடலில் செய்த பழைய அணுகுண்டு பாகிஸ்தானிடம் இருப்பதாக நம்பபடுகின்றது. மற்றபடி சொந்த தொழில்நுட்பம் ஏதும் அவர்களிடம் கிடையாது தீவிரவாதம் தவிர.

இன்னொன்று பாகிஸ்தான் ஜாதகம் அபாரமானது, போராடமலே அவர்களுக்கு நாடு கிடைக்கும், அவர்கள் கேட்காமலே வல்லரசுகள் அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுப்பார்கள். அணுகுண்டு கொடுப்பார்கள். எல்லாம் எதற்காக? இந்தியாவினை முடக்க. அப்படியும் யுத்ததில் அடிவாங்கும் பாகிஸ்தான், 4 தீவிரவாதிகளை வைத்து இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும், அதோடு வல்லரசுகளை நோக்கி கட்டை விரலை உயர்த்தும், அவர்கள் காரி துப்புவார்கள்.

ஆனால் நிச்சயமாக சொல்லலாம் இந்தியா ஓரளவு சொந்த தயாரிப்பு கொண்டது, இன்று ஓரளவிற்கு இந்திய ராணுவம் வலிமையுடையது என்றால் அதன் ஏவுகணை பலம் ஒரு காரணம். அதன் மூலம்… சந்தேகமே இல்லாமல் அப்துல் கலாம். இதனால்தான் மிக நவீன கிரையோஜனிக் ராக்கெட் எஞ்சின்களை ரஷ்யா தரச் சம்மதித்தபொழுது குறுக்கே பாய்விரித்து படுத்து தடுத்தது அமெரிக்கா. அதனால்தான் இன்னும் ஜி.எஸ்.எல்.வி தாண்டி அடுத்த கட்டம் நம்மால் செல்லமுடியவில்லை.

இன்னும் நமது விண்வெளி ராக்கெட்டுகளுக்கு முழுச் சக்தி காணாது, சொந்த முயற்சியில் ஏதோ மங்கள்யான் வரை சாதிக்கின்றோம். அதனால் தான் அப்துல்கலாமை அவர்களுக்கு பிடிப்பதில்லை. சொந்த ஏர்போர்ட்டில் அவரை ஏளனப்படுத்திவிட்டு, “அப்படியா? அப்படி ஒருவரை எமக்கு தெரியாதே” என கிண்டலாய் சொல்வார்கள், அதாவது அவர்களை தவிர வேறு யார் ஆயுதம் செய்தாலும் பொறுக்காது. ஒய்வு பெற்றபின் அல்ல, அவர் நினைத்திருந்தால் உலகில் எந்த நாட்டிற்கும் சென்று கோடிமேல் கோடி குவித்திருக்கலாம். அந்த துறை அப்படி (ஐ.டி.ஐ படித்து விட்டு சில நாடுகளில் சென்றுபணியாற்றி சிலர் அடிக்கும் அலப்பறையே தாளவில்லை). அவர் கல்வி அப்படி, அனுபவம் அப்படி.

எல்லாவற்றிற்கும் மேல் ஒரு மாபெரும் தேசத்தின் ராணுவத்தையே உயர்த்திய சாதுர்யம், இதற்கு மேல் என்ன வேண்டும்? எல்லா நாடுகளும் ரத்தின கம்பளம் குவித்து வரவேற்றிருக்கும். அது கூட வேண்டாம் தனியாக ஒரு ஆயுதக் கம்பெனி தொடங்கியிருந்தாலும் அவர் உலகின் முண்ணனி வியாபாரியாக மாறி இருப்பார். அட வியாபாரம் வேண்டாம் ஆலோசகராக இருந்தாலும் ‘அள்ளி அள்ளி’ எடுத்திருப்பார், அவர்களும் தங்க வீட்டிலே வைத்து தாங்கியிருப்பர். கிட்டதட்ட அரபு அரசர்கள் அல்லது ஐரோப்பிய தொழிலதிபர்களின் அளவிற்கு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கலாம். ஆயுத வியாபாரம் என்றென்றும் உலகில் நம்பர் 1 லாபகரமான தொழில்.

உண்மையில் அவர் அதற்கெல்லாம் ஆசைபடவில்லை, நாடு உயரவேண்டும், சுபிட்சமாக வாழ பாதுகாப்பு அவசியம், அதற்காகத்தான் உழைத்தார். குடியரசு தலைவர் பதவி அவரை தேடிவந்தது, அங்கு உரை நிகழ்த்தும் பொழுதெல்லாம் ‘திருக்குறளை’ மேற்கோள் காட்டி தமிழராக நின்றார். உலகமெல்லாம் கொண்டாடிய அந்த படித்த விஞ்ஞான தமிழன், தமிழகத்தின் சில இடங்களிலும் சில அரசியல் காட்சிகளிலும், 5ம்வகுப்பு கூட தாண்டாத தமிழக அரசியல்வாதிகளால் மட்டம் தட்டபட்டு அவமானபடுத்தபட்டார், ஆனால் அப்துல் கலாம் ஒரு வார்த்தை கூட பதில் பேசாது தனது பெருந்தன்மையை காட்டிய நிகழ்வுகளும் உண்டு.

இரண்டாம் முறை அவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பும் இருந்தது, அவ்வாறு நடந்தும் இருக்கலாம், ஆனால் சில வஞ்சக திட்டங்களால் வீழ்த்தபட்டார். இந்த உலக விஞ்ஞானி அவர்களை மதிக்கவில்லையாம், பொங்கிவிட்டார்கள். ஜனநாயக நாட்டில் எதுவும் சாத்தியம். நிச்சயமாக அவர்கள் வட இந்தியர்கள் அல்ல, திராவிடர்கள்தான். கலாம் ராமேஸ்வரத்து மண்ணை சேர்ந்தவர், அம்மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, என இன்னும் ஏராளமான சர்ச்சைகள் அவர்மேல் உண்டு. அணுசக்தியை ஆதரித்தார் என்ற பழியும் உண்டு.

நிச்சயமாக அவர் அணுவிஞ்ஞானி அல்ல ஆனால் மூத்த விஞ்ஞானி எனும் பதவியில் இந்திய அணுசக்தி குறித்த அனுபவம் அவருக்கு அத்துப்படி. இன்னொன்று அணுஆலை என்பது சர்வதேச அரசியல், பல மர்மங்களை கொண்டது, அந்த அரசியல் அவருக்குத் தெரியாது. ஆனால் ஒரு இந்திய தலைமை விஞ்ஞானியாக ஒரு பதிலைக் கொடுக்கவேண்டிய கட்டாயம், ஆனால் கவனித்து பாருங்கள் அவர் சொல்வது எல்லாம் ஆறுகள் இணைப்பு, சூரிய ஓளி மின்சாரம், இயற்கையோடு இணைந்த அறிவியல்.

சிலர் சொல்வார்கள் கலாம் ராமேஸ்வரம் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, கூடங்குளம் அணுவுலையினை நிறுத்தவில்லை, அவர் தமிழுக்கு என்ன செய்தார்? ஈழ மக்கள் விடுதலைக்கு என்ன செய்தார்? சிலர் ஒருபடி மேலே சென்று சொல்வார்கள், நல்ல தமிழர் என்றால் கலாம் ராக்கெட் நுட்பத்தை புலிகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்க வேண்டமா?

அவர் இந்திய குடிமகனாக வாழ்ந்தார், அதனால் சிலர் அவரை ஒரு வகை ஆர்எஸ்எஸ் என்றார்கள். அப்படியானால் காமராஜரும் ஆர் எஸ்எஸ், காந்தி என சகலரும் அப்படியே. இந்த மொத்த தேசத்தின் பாதுகாப்பையும், வளத்தையுமே பற்றி கவலைபட்டாரே ஒழிய, தனியாக தமிழருக்கு மட்டும் என்ன செய்ய முடியும்? அப்படி தமிழகத்திலே முடங்கி இருந்தால் கலாம் கிடைத்திருப்பாரா?, சரி வாதத்திற்கு அப்படி தமிழக பிரச்சினையில் இறங்கினாலும் என்ன நடக்கும்? உதயகுமார் போன்றவர்கள் வாங்கிய வாக்கு என்ன? இது தமிழகம், அரசியலில் ஒரு மாற்றமும் கொண்டுவர முடியா தமிழகம்.

கழுகு உயர பறக்கவேண்டியது, அது ஏன் கோழிகளுடன் குப்பை கிளரவில்லை என்றால் அது வாதமா? கலாமினை குறை கூறுபவர்களுக்கு ஒன்று மனசாட்சி இல்லாமல் இருக்க வேண்டும், அல்லது நாட்டுபற்றில்லா குறுகிய மனப்பான்மை இருக்கவேண்டும் அழிவு ஆயுதங்களை உருவாக்கிய கலாம் நல்ல மனிதராக இருக்கமுடியுமா? என்று சில வாதங்கள். அணுகுண்டை உருவாக்கிய ஐன்ஸ்டீனை விடவா மனிதநேயம் பேசிவிட முடியும்? இது பாதுகாப்பு, தேச பாதுகாப்பு. இத்தனை ஏவுகணைகளை வைத்திருக்கின்றோமே தவிர யார் மீது வீசினோம், மீனவனை காப்பாற்றாத நாட்டிற்கு ஏவுகணை எதற்கு என்பதெல்லாம் அலட்டல். அது தேசப் பிரச்சினை என்றால் என்றோ கடற்படை புகுந்துவிடும், இது வேறு அரசியல் விட்டுவிடலாம்.

காந்தி, காமராஜர் (அவரும் விருதுநகருக்கு என்ன செய்தார்?) வரிசையில் ஒரு சலசல்ப்புமே இல்லாமல் கலாமையும் வைக்கலாம். இந்தியா அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கௌரவப்படுத்தியது, அது என்ன பாரத ரத்னா? இப்பொழுதெல்லாம் அது யாருக்கெல்லாமோ வழங்கபடுகிறது.. இன்னும் வழங்குவார்கள். ஆனால் மோடியின் அரசு புதிய ஏவுகணை திட்டங்களுக்கு கலாம் சீரியஸ் என பெயரிட்டிருக்கின்றார்கள் அல்லவா? அதுதான் உண்மையான‌ மரியாதை. அதைவிட இன்னொரு உச்சபெருமை வேண்டுமென்றால், விரைவில் குலசேகரப்பட்டனத்தில் ஸ்ரீஹரிஹோட்டா போல ஒரு தளம் அமைக்கும் திட்டத்தில் இஸ்ரோ இருக்கின்றது, காரணம் அதன் அமைவிடம் மற்றும் கண்காணிக்கும் வசதிகள் மிக மிக பொருத்தமானது, அப்படி அமையும் பட்சத்தில் அதற்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டினால் அது பெரும் பாராட்டாக அமையும்.

ஏவுகனைகளின் பிதாமகன் மிக உறுதியாக திப்பு சுல்தான். அவர்தான் அந்த நுட்பத்தை உலகிற்கு சொன்னார். 15,000 அடி பாயும் ஏவுகனையை உருவாக்கினார் (இன்றும் அதன் மாதிரி அமெரிக்க ஏவுகணை திட்ட அலுவலகத்தில் உண்டு). அதன்பின் அதனை செயல்படுத்தியது ஜெர்மன். நவீன ஏவுகனைகளின் தந்தை என ‘வார்ண் பிரவுனை’க் கொண்டாடும் உலகம், ஹிட்லரிடம் பணியாற்றியவர் பின்னாளில் அமெரிக்காவிற்கு யுத்த கைதியாக கொண்டு செல்லபட்டார், அதன்பின் செயற்கை கோள் ராக்கெட் மற்றும் ஏவுகனைகளை தயாரித்து அமெரிக்காவை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றார், அந்த தலைமுறைக்கு ஐன்ஸ்டீனுக்கு அடுத்து அவர்தான் ஹீரோ.

இந்தியாவிற்கு ஏவுகணைகளைக் கொடுத்து பலமான நாடாக்கியதில் இந்த எளிய தமிழனின் சாதனை மிக பலமானது. அதனினும் மேல் இன்னும் இந்த நாட்டையும் அதன் தூண்களாகிய மாணவர்களையும் நேசித்த‌ அவரின் மனமும் மிக விலாசமானது. மொழி, இனம், மதம் என சகலமும் கடந்து ஓரு இந்தியனாக தன்னை முன்னிலைப்படுத்திய தமிழர்களின் வரிசையில் காமராஜருக்கு பின் இடம் பிடித்துகொண்டவர் கலாம்.

இருவருக்கும் குடும்பமில்லை, இருவருமே சொந்தபந்தங்களுக்கோ அல்லது சொந்த மக்களுக்கோ ஏதும் செய்ததுமில்லை. கலாம் காலமாகி இருக்கலாம், ஆனால் அவரது முத்திரை இந்தியாவில் அழிந்துவிடக்கூடியது அல்ல. இந்திய ராணுவம் இருக்கும் வரைக்கும் என்றல்ல, இந்திய கல்வி நிலையங்கள் இருக்கும் வரை, மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார். பலநூறு ஆண்டுகள் செய்யவேண்டிய சேவையை 60 ஆண்டுகள் உழைப்பினில் இந்தியாவிற்கு செய்திருக்கும் விஞ்ஞான மகான் அவர்.

ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், இந்நாடு விசாலமான மனதுடையது, நாட்டிற்காய் நீங்கள் உழைத்தால், நல்ல கல்வியோடு பெரும் சிந்தனையோடு உழைத்தால் எந்த சாதியில் பிறந்தாலும், எந்த மதத்தில் பிறந்தாலும், எந்த குலத்தில் பிறந்தாலும் இந்நாடு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் போகாது. கலாம், அம்பேத்கர் எல்லாம் அப்படி கல்வியாலும் நாட்டு சிந்தனையாலும் முத்திரை பதித்தவர்கள், தங்கள் சாதியாலோ மதத்தாலோ அல்ல, மாறாக கல்வியால், பரந்த சிந்தனையால் சிந்தனை பெரிதாகவும் பரந்த மனத்தோடும் இருந்துவிட்டால் அவனுக்கு சாதி, மத, இன அடையாளம் தேவைப்படாது, இந்தியன் எனும் ஒற்றை அடையாளம் போதும்.

கலாமிற்கு இந்த பாஜக அரசு செய்யும் மரியாதை பாராட்டதக்கது, அவருக்கு பாரத ரத்னா வழங்கினார்கள், கலாம் சீரியல் ஏவுகணை என அந்தத் திட்டத்திற்கு பெயரிட்டார்கள், இதோ பெரும் மணிமண்டபமும் திறக்கின்றார்கள். அதனைத் திறக்க வரும் பிரதமர் மோடியினை இந்நாட்டு குடிமகனாய் வரவேற்கின்றோம், வாழ்த்துக்கள் மோடி.

மாணவர்களை நிரம்ப நேசித்தவர் அவர், அவரின் இன்னாளில் மாணவர்கள் நிச்சயம் அவரை நினைவு கூறவேண்டும். எல்லா மாணவர்களும் அவரை படிக்கட்டும். கோடி மாணவர்களில் ஒரு கலாம் வருங்காலத்தில் வரமாட்டானா? அவருக்காக ஏங்கட்டும், அவரின் நினைவுகள் மாணவர் மனதில் பதியட்டும், இன்று மாணவர்கள் புரட்டும் புத்தகத்தில் அவர்களின் கண்ணீர் அப்துல் கலாமிற்காக விழுட்டும். இந்தியனாய், இந்த கணிணியில் எனது கண்ணீர் சொட்டு சொட்டாய் விழுவதனை போல..! -ஸ்டான்லி ராஜன்

tamil.oneindia.com

TAGS: