சிக்கிம் பதற்றத்துக்கு இடையே இந்தியா–சீனா பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை

india china boder

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் 2 நாள் கூட்டம் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது.

பீஜிங்,

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் 2 நாள் கூட்டம் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது. சீனா சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் இந்தியா, சீனா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று முன்தினம் பீஜிங் போய் சேர்ந்தார். இந்த கூட்டத்தின் இடையே சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜைச்சியை, அவர் சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எனினும் சிக்கிம் எல்லையில் இந்தியா–சீனா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் போர்ப்பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தியிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இரு நாட்டு எல்லை நடவடிக்கை தொடர்பான விவகாரங்களுக்கு தோவல்–யாங் இருவரும்தான் சிறப்பு பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

-dailythanthi.com

TAGS: