வாங்க, முதல்ல தமிழ்நாட்டைப் பாதுகாப்போம்.. உலகத் தமிழர்களுக்கு அழைப்பு!

savetamilnadu

ஹூஸ்டன்(யு.எஸ்): தமிழகத்தைப் பாதுகாக்க வாருங்கள் என்று உலகத் தமிழர்களுக்கு கார்த்திகேய சிவசேனாபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஹூஸ்டனில் கார்த்திகேய சிவசேனாபதி, ஒரிசா பாலு ஆகியோருடன் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பங்கேற்று பேசிய கார்த்திகேய சிவசேனாபதி, “ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு, விவசாயிகள் தற்கொலை, நீர் ஆதாரம், மணல் கொள்ளை என அடுத்தடுத்த பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் போராட்டம் என்ற அளவில் போய்க்கொண்டிருக்கிறது.

SaveJallikkattu, SaveTamilNaduFarmers, SaveNeduvasal, SaveKathiramangalam என்று தனித்தனியாக போராடுவதற்கு பதிலாக #SaveTamilNadu என்ற முழக்கத்துடன் அனைத்து போராட்டங்களையும் ஒருமுகப்படுத்த வேண்டும். தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் ஒட்டு மொத்தமாக இணைந்து போராட வேண்டும்.

எதுவும் அந்தந்த ஊர் மட்டுமே சார்ந்த பிரச்சனைகள் அல்ல. ஒட்டு மொத்த தமிழகத்தின் பிரச்சனைகள். வருங்கால தமிழர் சந்ததிகளின் இன்னல்களை களைய அனைவரும் ஒன்று திரண்டு தீர்வு காண்போம். ஜல்லிக்கட்டுக்கு உலகெங்கும் வாழ் தமிழர்கள், பிரச்சனைகளிலிருந்து தமிழ் நாட்டை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும்.

ஊழலை கிராம பஞ்சாயத்து மட்டத்திலிருந்து ஒழிக்க வேண்டும். மண்வளம், நீர்வளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க மக்கள் அனைவருக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தின் மீது வெளிநாடு வாழ் தமிழர்கள் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வளமான தமிழகத்தை உருவாக்க முடியும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரிசா பாலு பேசுகையில், “தமிழர்கள் கடல் கடந்து வாணிகம் செய்து வந்தது மட்டுமல்லாமல், உலகெங்கும் பரவி வசித்து வந்துள்ளார்கள். அங்கெல்லாம் தமிழர் பாரம்பரியத்தை நிலை நிறுத்தியுள்ளார்கள். தமிழர்கள் வழி வழியாக கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கங்களை, உலகின் பல பகுதிகளில் இன்றும் மக்கள் பின்பற்றி வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் பல்வேறு நாடுகளில் இன்றும் இருந்து வருகிறது. ஆமைகளின் கடல்வழித் தடத்தைப் பின் தொடர்ந்து இந்த குடியேற்றங்களும், வாணிபங்களும் நடைபெற்றுள்ளன.

அன்று தொடர்ந்த பயணத்தின் தொடர்ச்சியாகத் தான் தமிழர்கள் இன்றும் உலக அளவில் வேலை நிமித்தமாக குடியேறி வருகிறார்கள். பண்டைய தமிழர்கள் போல், நாமும் வணிகத்தில் முன்னேற வேண்டும். தமிழ்ச் சமுதாயம் செல்வச் செழிப்பு கொண்டதாக மாற வேண்டும்,” என்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய முன்னோடித் தமிழர் சாம் கண்ணப்பன், இளைஞர்கள் தமிழ்நாட்டு நலனுக்காக கொண்டுள்ள அக்கறையும் உழைப்பும் பிரமிப்பூட்டுகிறது. இந்த இளைஞர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்களும் தயாராக உள்ளோம் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள், SaveTamilNaduFarmers மற்றும் ஹார்வர்ட் தமிழ் இருக்கை தன்னார்வலர்கள் இணைந்து செய்திருந்தார்கள். – இர தினகர்

tamil.oneindia.com

TAGS: