இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம், அனைத்து சோதனைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என மத்திய கணக்கு தணிக்கையாளர் குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசின் கணக்கு தனிக்கையாளர் குழு எனப்படும் சிஏஜி அனைத்து துறை தொடர்பாக அறிக்கைகளை தயார் செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக தற்போது இந்திய அரசின் ஏவுகணை திட்டம் முற்றாக தோல்வி அடைந்து விட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இருப்பினும், சிஏஜி அறிக்கை குறித்து இதுவரை விமானப்படை தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கவில்லை. இந்த ஏவுகணை மூலம், எதிரி நாட்டு ஏவுகணைகளை வழியிலேயே மறித்துத் தாக்கி அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது எனவும், ஆனால் அது தனது வேலையை சரியாக செய்யவில்லை என்பது துரதிருஷ்டவசமானது எனவும் சிஏஜி கூறியுள்ளது.
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை திட்டத்திற்காக, இதுவரை 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
சிஏஜியின் அறிக்கையானது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பாகிஸ்தான், சீனா எல்லைகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சிஏஜியின் அறிக்கை இந்திய எல்லைப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com