பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்குத் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அணை கட்ட கர்நாடக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.
இதனிடையே, தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இது குறித்து விவாதிக்க வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்குக் கர்நாடக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது உறுதி என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டாலும் கட்டியே தீருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.