ஜம்மு-காஷ்மீர்: லஷ்கர்-இ-தெய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி அபு துஜானாவை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு கொன்றனர். இதனையடுத்து காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.
அபுதுஜானாவில் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் இந்தியாவிற்குள் கலவரம் செய்யவும், நாசவேலைகளில் ஈடுபடவும் தீவிரவாத பயிற்சி அளித்து ஸ்லீப்பர் செல்களாக அனுப்பி வைக்கிறது. இதற்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஆதரவாளர்களை உருவாக்கி வைத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகளின் மூத்த தளபதி போல செயல்பட்டு வந்தவன் அபு துஜானா. இவன் காஷ்மீரில் புல்லாமா மாவட்டத்தில் உள்ள ஹக்ரிபோரா என்ற இடத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்தது.
இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த ஊரை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டுக்குள் அபு துஜானாவுடன் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களை உயிருடன் பிடிக்க பாதுகாப்புப்படையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தவே, இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இருவருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அபு துஜானா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டாக தகவல் வெளியானது. கடந்த 2010ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் ஊடுருவிய அபு துஜானா லஷ்கர் அமைப்பை தீவிரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டான். அபு துஜானா கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கலவர சம்பவங்களை தூண்டிவிட்டு நடத்தி வந்தான்.
இதையடுத்து அவனது தலைக்கு போலீசார் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்திருந்தனர். காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது வாலிபர்களை தூண்டி விட்டு கல் வீசச் செய்ததில் இவனுக்கு முக்கிய பங்கு உண்டு.
இதுவரை 5 முறைக்கு மேல் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் இருந்து அபு துஜானா தப்பித்துள்ளார். மாறு வேடம் அணிந்து தப்பிச் செல்வதில் கில்லாடியாம் அபு துஜானா.
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அபு துஜானா சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து காஷ்மீரில் பதற்றம் உருவானது. அபுதுஜானாவில் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் வைக்க மொபைல் இணையசேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.