பெய்ஜிங்: டோக்லாம் எல்லைப் பிரச்சனையில் மிகப் பொறுமையாக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. டோக்லாம் விவகாரத்தில் இந்தியா சீனா இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டோக்லாம் எல்லையில் அத்துமீறும் சீனா கடந்த வாரம் உத்தரகாண்ட்டிலும் ஒரு கிலோ மீட்டர் வரை ஊடுருவியது.
ஆனால் இந்தியாதான் எல்லையில் அத்துமீறுவதாக சீன அதிபர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் என அனைவரும் வரிந்துக்கட்டி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே அந்நாட்டு ராணுவ வீரர்களிடையே பேசிய அதிபர் ஸி ஜின்பிங் போரை எதிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்திருந்தார்.
இரு நாட்டு உறவில் சிக்கல்
இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டோக்லாம் எல்லைப் பிரச்சனையில் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என சீனா தெரிவித்துள்ளது.
பிரச்னையை தீர்க்க சீனா முயற்சி
இதுதொடர்பாக பேசிய சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர், டோக்லாம் பிரச்னையில் சீனா பல நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்ததாக தெரிவித்துள்ளார். தூதரக ரீதியில் அணுகி பிரச்னையை தீர்க்க சீனா முயற்சி செய்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு
சீனாவின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறிய அவர், இந்திய ராணுவம் உடனடியாக டோக்லாம் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையில் தாமதப்படுத்தும் நடவடிக்கையை இந்தியா கைவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறைத்து மதிப்பிட வேண்டாம்
சீனாவை எந்த நாடும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ள சீன ராணுவ செய்தி தொடர்பாளர், தனது பாதுகாப்பு இணையாண்மையை பாதுகாக்கும் திறன் சீன ராணுவத்திற்கு உண்டு என தெரிவித்துள்ளார்.
தயக்கம் இன்றி நடவடிக்கை
அமைதி மீது தங்களுக்கு நம்பிக்கை உண்டு என்றும் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கையை சீன ராணுவம் எந்த தயக்கமும் இன்றி எடுக்கும் என்றும் அவர் கூறினார்.