எல்லை பிரச்சினையில் சீனாவுடன் தூதரக ரீதியாக பேசி வருகிறோம் இந்தியா தகவல்

india china boder

இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் என்ற பகுதி உள்ளது. சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியான அங்கு இந்திய ராணுவத்தின் பதுங்குகுழிகளை சீன ராணுவம் அழித்தது. மேலும், அத்துமீறி சாலையும் அமைத்து வருகிறது.

இதனால், அப்பகுதியில் இந்திய படைகள் குவிக்கப்பட்டன. படைகளை திரும்பப்பெறுமாறு சீனா மிரட்டியும், இந்தியா பணியவில்லை.

இந்தியா பேச்சுவார்த்தை

2 மாதங்களாக பதற்றம் ஏற்படுத்தி வரும் இப்பிரச்சினை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பக்லே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டோக்லாம் பிரச்சினையில், இந்தியா, சீனா ஆகிய இருதரப்பும் ஏற்கத்தக்க தீர்வை எட்டுவதற்காக, சீனாவுடன் தூதரகரீதியாக பேசி வருகிறோம். இதில், பூடானையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறோம்.

இந்தியா தனது படைவீரர் கள் எண்ணிக்கையை 400-ல் இருந்து 40 ஆக குறைத்து விட்டதாக சீனா கூறியுள்ளது பற்றி கேட்கிறீர்கள். இதெல்லாம் இயக்கம் சார்ந்த விவகாரம்.

அமைதியை எட்டுவதுதான் எங்கள் நோக்கம். தூதரகரீதியாக அந்த நோக்கம் எட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீனா கொக்கரிப்பு

இதற்கிடையே, இப்பிரச்சினை குறித்து சீன ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

டோக்லாம் பிரச்சினையில், சீனா பல நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்தது. தூதரகரீதியாக அணுகி பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்தது. இருப்பினும், சீனாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு. இந்திய ராணுவம் உடனடியாக டோக்லாம் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும்.

இதில் தாமதப்படுத்தும் நடவடிக்கையை இந்தியா கைவிட வேண்டும். சீனாவை எந்த நாடும் குறைத்து மதிப்பிட வேண்டாம். நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கையை சீன ராணுவம் எந்த தயக்கமும் இன்றி எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com

TAGS: