இரண்டு வாரத்திற்குள் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்: சீனா மிரட்டல்

dhok lam

சிக்கிம் எல்லையில் இன்னும் 2 வாரத்திற்குள் இந்திய இராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என்று சீனா போர் மிரட்டல் விடுத்துள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

இந்த சாலையை அமைக்க அனுமதித்து விட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி பொருட்களை எடுத்து செல்வது தடைப்படும் என்று இந்தியா கருதுகிறது.

மேலும் சீனா தன்னிச்சையாக இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள நிலையே தொடர வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது.

எங்களது எல்லைக்குள் தான் இந்திய படைகள் அத்துமீறி நுழைந்துள்ளன. எனவே, இந்தியா தனது இராணுவத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.

இதனால் எழுந்த பிரச்சினையை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16 -ந்தேதி முதல் டோக்லாமில் இந்தியாவும், சீனாவும் இராணுவத்தை குவித்துள்ளன. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களாக சீன இராணுவம், திபெத் தன்னாட்சி பகுதியில் 18 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் பீரங்கிகளை குவித்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.

இது இந்திய இராணுவத்தின் மீதான தாக்குதலுக்கான ஒத்திகை என்று சீன அரசின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபற்றி ஷாங்காய் சர்வதேச நட்புறவு நிறுவனத்தின் சமூக அறிவியல் அகாடமி ஆராய்ச்சியாளரான ஹூ ஷியோங் என்பவர் அந்த நாளிதழில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

சமீபகாலமாக சீனாவுக்கு எதிராக இந்தியா பக்குவம் இல்லாத கொள்கை நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சீனா அதுபோல் நடந்து கொள்வதில்லை.

பிரச்சினை இல்லாத இடங்களுக்குள் நுழைந்து பிரச்சினையை ஏற்படுத்தி பேரம் பேசுவதை இந்தியா கையாண்டு வருகிறது.

டோக்லாம் பகுதியில் இரு இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ள நிலை வெகுகாலத்திற்கு நீடிக்காது. அதை சீனா அனுமதிக்கவும் செய்யாது. இதற்கான போர் ஒத்திகைதான் தற்போது நடந்து வருகிறது.

இந்த பகுதியில் இருந்து இன்னும் 2 வாரத்திற்குள் இந்திய இராணுவம் வெளியேற்றப்படும். இதற்காக சிறிய அளவிலான போர் நடவடிக்கையை சீன இராணுவம் மேற்கொள்ளும்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவித்த பிறகே இந்த தாக்குதல் நடத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

– Maalai Malar

TAGS: