உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி விவகாரத்தில் இணைந்து உள்ள ஷியா வக்ஃபு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட்டை தாக்கல் செய்து உள்ளது. அபிடவிட்டில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் என்றும் குறிப்பிட்ட தொலைவில் இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதியில் மசூதியை கட்டலாம் எனவும் தெரிவித்து உள்ளது.
ஷியா பிரிவு சமீபத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் பாபர் மசூதி ஷியா வாரியத்துக்கு சொந்தமானது என்ற நிலையில், இதில் சன்னி இஸ்லாமிய வாரியத்திற்கு எந்த பங்கும் கிடையாது என கூறி உள்ளது.
ஷியா மத்திய வக்ஃபு வாரியத்திற்கு மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், பிறதரப்புடன் அமைதியான தீர்வுக்குவரவும் உரிமை உள்ளது என அபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழிபாடுகள் நடைபெறும் இடத்தில் மோதல், கசப்புணர்விற்கு வழிவகைசெய்யும் ஒலிபெருக்கிகளை இருதரப்பும் தவிர்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. இப்பிரச்சனையில் அமைதியை ஏற்படுத்த ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் மசூதியை கட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு உரிமை கொண்டாடும் ஷியா மத்திய வக்ஃபு வாரியம் தன்னுடைய அபிடவிட்டில் பிரச்சனைக்கு அமைதியான தீர்வை காண்பதற்கு சாதகமாக உள்ளது என்பதை காட்டி உள்ளது.
ஷியா மத்திய வக்ஃபு வாரியத்தின் தலைவர் வாஸிம் ரிஸ்வி கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ஷியா முஸ்லிம்களுக்கு சொந்தமானது. பாபர் ஆட்சிக் காலத்தில், பாரசீகத்தைச் சேர்ந்த ஷியா கட்டுமானக் கலைஞரால் கட்டப்பட்டது தான் அந்த மசூதி.
அதனை சன்னி பிரிவினர் தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டனர். இதை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதை மறு ஆய்வு செய்யக் கோரியும், பாபர் மசூதி விவகாரத்தில் எங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரியும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் என்று கூறியிருந்தார்.
-dailythanthi.com