இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமில் உள்ள டோகோலாம் பகுதியில் அத்துமீறி நுழைந்து, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட சீன வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.
இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கடல் எல்லை விவகாரங்கள் பிரிவு துணை இயக்குனர், வாங் வென்லி, பீஜிங்கில் இந்திய பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறியதாவது, தற்போதைய சூழலில், இந்தியாவுடன் பேச்சு நடத்துவது இயலாத காரியம். எங்கள் அரசை தகுதியற்றதாக மக்கள் நினைக்க கூடும்.
டோகோலாமில், எங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நாங்கள் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்கிறோம். அங்கிருந்து, இந்திய வீரர்கள் வாபஸ் பெறும் வரை, இரு நாடுகள் இடையே பேச்சு கிடையாது.
டோகோலாம் பகுதியில், ஒரு இந்திய வீரர், ஒரு நாள் இருந்தால் கூட அது எங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் செயல்.
உத்தரகாண்டில் உள்ள காலாபானி பகுதி அல்லது காஷ்மீரிலோ சீன வீரர்கள் நுழைந்தால், இந்தியா என்ன செய்யும்? எனவே, மூன்று நாடுகளின் எல்லை சந்திப்பதை ஒரு சாக்காக கூறி இந்தியா பிரச்னையை வளர்க்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
-lankasri.com