வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா?

நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், அந்த அரசியல்வாதியையும் நிச்சயமாக அறிமுகம் செய்துவைக்க வேண்டும். அவர்தான் கரியமுண்டா. ஒருமுறை எம்.பி-யாக இருந்தாலே மகனுக்கு பெட்ரோல் பங்க் வைத்துக் கொடுத்து, நான்கு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துவிடுபவர்களுக்கு மத்தியில், கரியமுண்டாவின் மகள், தெருவில் மாம்பழம் விற்கிறார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரியமுண்டா, 1977-ம் ஆண்டு முதல் குந்தி (தற்போது ஜார்ஹன்ட்) தொகுதியிலிருந்து ஏழு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாயின் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி மாறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கரியமுண்டா. தேர்தல் பிரசாரத்துக்கு எல்லாம் அவர் போகவேண்டிய அவசியமே இல்லை. `படுத்துக்கொண்டே ஜெயித்தார்’ எனச் சொல்வார்கள் அல்லவா! முண்டாவும் அந்த ரகம் தான். வாஜ்பாய் அமைத்த 13 நாள் அமைச்சரவையில், முண்டா அமைச்சராக இருந்தார். மக்களவை துணை சபாநாயகர் பதவியும் வகித்திருக்கிறார்.

77 வயதான கரியமுண்டா, இப்போதும் குந்தி தொகுதி எம்.பி-தான். ஜார்ஹன்டில் அனிகாரா என்ற கிராமத்தில் சாதாரண ஓட்டு வீட்டில்தான் வசித்துவருகிறார். வீட்டைச் சுற்றி உள்ள நிலத்தில், காய்கறிகளை அவரே பயிரிடுகிறார். எஞ்சியதை விற்பனைக்கு அனுப்புவார்.

ஜார்ஹன்ட் மாநில அமைச்சர்களே கோடிகளில் புரள்கையில், எட்டு முறை எம்.பி-யாக இருந்த கரியமுண்டாவின் சொத்து மதிப்பு 75 லட்சம் ரூபாய்தான். கரியமுண்டாவின் தொகுதியில் நக்ஸலைட்டுகள் தொல்லையும் அதிகம். இருப்பினும், கரியமுண்டா தன் வீட்டுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று ஒரு நாளும் கேட்டதில்லை.

இவருக்கு, இரண்டு மகன்கள் நான்கு மகள்கள். அதில் சந்திரவதி சாரு என்பவர் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். தந்தை எம்.பி-யாக இருந்தாலும், அதன் பாதிப்பு இல்லாமல் வளர்ந்தவர் சந்திரவதி. கரியமுண்டா, தன் குழந்தைகளை சமூக அக்கறையுடன்தான் வளர்த்திருந்தார்.

எம்.பி-யின் மகள் என்றே கருதாத சந்திரவதி, சாமான்ய மக்களுடன் விரும்பிப் பழகுவார். சந்தைக்குச் சென்று மாம்பழங்களை வாங்கி வந்து தெருக்களில் அமர்ந்து விற்பனை செய்வார். பணத் தேவைக்காக சந்திரவதி மாம்பழ விற்பனையில் ஈடுபடவில்லை.

விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், மாம்பழ விற்பனையில் கிடைக்கும் வருவாயில் ஏழைக் குழந்தைகளின் பள்ளிக் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் சந்திரவதி இந்த மாம்பழ விற்பனை செய்கிறார்.

சந்திரவதி கூறுகையில், “என் தந்தை `சமுதாயத்தின் அடித்தட்டு மக்களை எப்போதும் மறந்துவிடக் கூடாது’ என்று கூறுவார். தற்போதையை தலைமுறை, விவசாயத்தில் ஈடுபடுவதைக் கேவலமாக நினைக்கிறது. விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்பதை மறந்துவிடக் கூடாது. இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஆசிரியைப் பணியுடன் மாம்பழம் விற்கும் பணியிலும் ஈடுபடுகிறேன். இதில், கிடைக்கும் வருவாயை வைத்து, முடிந்த வரை ஏழைகளுக்கு உதவுகிறேன். மக்கள் எளிய வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

– Vikatan

TAGS: