சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லையில் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. அங்கு புதிதாக சாலை அமைக்கவும் முயற்சி செய்தது. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சீன அரசு கூறிய போது, சர்ச்சைக்குரிய பகுதி சீனா- பூட்டான் சம்பந்தப்பட்டது, இதில் இந்தியா தலையிடுவதை ஏற்க முடியாது. டோக்லாம் எல்லையில் இருந்து இந்திய படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அப்போது டோக்லாம் எல்லையில் இருந்து சீன ராணுவம் 250 மீட்டர் பின்வாங்க வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை சீனா ஏற்றுக்கொண்டு முதல்கட்டமாக 100 மீட்டர் பின்வாங்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனை சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது:
டோக்லாம் எல்லையில் ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இந்தியாவின் வாதம், கோரிக்கை ஏற்கக்கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியின் கருத்து கடுமையாக உள்ளது. சீனா – இந்தியா இடையே இராணுவ மோதல் ஏற்படும் என்பதை அவரது பேச்சு சுட்டிக் காட்டுகிறது.
இந்தியாவின் டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் வரும் செப்டம்பரில் சீனாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்மறையாக உள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.