கேரளாவின் கொல்லம் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர் ஏழு மணி நேரங்களுக்கு பின்னர் பரிதாபமாய் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்தவர் முருகன்(வயது 30), கோட்டயம் புறநகர்பகுதியில் வசித்து வரும் முருகன் கொல்லத்தில் பால்கறந்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 6ம் திகதி இரவு 11 மணியளவில் விபத்தில் சிக்கியுள்ளார், அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் டிரைவர் ராஜூ என்பவர் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றார்.
கேரள மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை, மெடிசிட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மெடிட்ரைனா மருத்துவமனை, திருவனந்தபுரம் கிமிஸ் மருத்துவமனை, அஜீஜியா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என பல இடங்களுக்கு முருகனை கொண்டு சென்ற போதும் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஏழு மணிநேரமாக உயிருக்கு போராடியவர் பரிதாபமாய் உயிரிழந்தார், இதுதொடர்பாக மருத்துவமனைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கூறியதாவது, முருகனை மெடிட்ரைனா மருத்துவனையில் அனுமதிக்க டாக்டர்கள் மறுத்தனர், ஒருவர் மட்டும் வந்து முருகனை பரிசோதித்தார்.
நோயாளி தமிழகத்தை சேர்ந்தவர் என்றும், உதவிக்கு யாரும் இல்லை எனவும் கூறினேன், இதனையடுத்து தங்களிடம் வென்டிலேட்டர் காலியாக இல்லை என கூறி அனுமதிக்க மறுத்தனர்.
ஆனால் அந்த மருத்துவமனையில் போர்ட்டபிள் வென்டிலேட்டர் வசதி இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பொலிசார் நடத்திய விசாரணையில், மெடிட்ரைனா மருத்துவமனையில் ஏழு வென்டிலேட்டர்கள் இருந்தது தெரியவந்தது.
சம்பவதினத்தன்று மூன்று வென்டிலேட்டர்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததும், மூன்று பழுதடைந்த நிலையில் இருந்ததும், ஒன்று காலியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
தமிழன் என்ற காரணத்திற்காக மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-lankasri.com