முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதல்-அமைச்சருக்கு மனு

Murugan-askedராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதல்-அமைச்சருக்கு மனு அளித்துள்ளார். அவர் சிறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலிலும், முருகன் மனைவி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இதில் முருகனும், அவரது மனைவி நளினியும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச சிறை நிர்வாகம் அனுமதித்துள்ளது.

சமீபகாலமாக ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டுள்ள முருகன், காவி உடையில், ஜடாமுடியுடன் சாமியார் தோற்றத்தில் காணப்படுகிறார். விடுதலை செய்யக்கோரி பல போராட்டங்கள் செய்தும், பலனில்லாததால் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சிறையிலேயே ஜீவசமாதி அடையப்போவதாகவும் சில வாரங்களுக்கு முன்பு சிறைத்துறைக்கு மனு அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த மனுவில், ஆகஸ்டு 18-ந் தேதி (நேற்று) முதல் உணவு உண்ணாமல் கடவுளையே நினைத்து ஜீவசமாதி அடையப்போவதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் தினமும் ஒருவேளை உணவு உண்டும், பிற நேரங்களில் பழங்களை சாப்பிட்டு வருவதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முருகன் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்த நாளான நேற்று அவரை சிறைத்துறை காவலர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.

அவர் நேற்று காலையில் எழுந்து சிறை வளாகத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். கோவில் வளாகத்தில் அமர்ந்து அவர் தியானத்தில் ஈடுபட்டார். அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. எனவே, அவர் தனது அறைக்கு சென்று யாருடனும் பேசாமல் வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானம் செய்துவருவதாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் முருகன் ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் வழியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில், நான் கடந்த 26 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறேன். விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே, நான் இன்று (நேற்று) முதல் ஜீவசமாதி அடைவதற்காக உணவு உண்ணாமல் இருக்கப்போகிறேன். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சிறை காவலர்கள் மற்றும் கைதிகள் யாரும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, முருகன் உணவு உண்ணாமல் இருந்தால் அது சிறை விதிகளின்படி குற்றம். அவ்வாறு அவர், ஈடுபட்டால் அவருக்கு ஜெயில் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்றார்.

-dailythanthi.com

TAGS: