தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்க… பிரதமர், ஜனாதிபதிக்கு தமிழக விவசாயிகள் மனு

farmers-protest67டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியை கவரும் வகையில் யோகா செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் குறைகளை கேட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என்று கூறி பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு மனு எழுதி வைத்துள்ளனர்.

காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், நதிகளை இணைத்தல், வங்கி கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

37வது நாளாக போராட்டம் இன்று ஜந்தர் மந்தரில் விவசாயிகள் யோகா செய்து, நூதன போராட்டம் நடத்தினர். சர்வங்காசனம், பத்மாசனம், சூரியநமஸ்காரம் உள்ளிட்ட யோகா செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாயிகள் போராட்டம் பிரதமர் கண்ணுக்கு தெரியாததால் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினோம். அப்போது தெரியவில்லை. நேற்று யாகம் நடத்தினோம். ஆனால் யோகா செய்தால் தான் மோடிக்கு பிடிக்கும் என்பதால் இன்று யோகா செய்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.

தொடர் உண்ணாவிரதம்

டெல்லியில் விவசாயிகள் நாராயணசாமி, பெரியசாமி ஆகியோர் இன்று 13 வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இனியாவது பிரதமர் மோடி விவசாயிகளை திரும்பி பார்ப்பாரா என எதிர்பார்த்துள்ளளோம் என்று கூறியுள்ளார் அய்யாக்கண்ணு.

தற்கொலை செய்து கொள்ள அனுமதி

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் எங்களை சந்தித்து பேசி எங்களின் குறைகளை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு எழுதி வைத்துள்ளதாக கூறியுள்ளார் அய்யாக்கண்ணு.

tamil.oneindia.com

TAGS: