சென்னை: ஒருமாத காலம் பரோல் அளிக்கப்பட்டதை அடுத்து பேரறிவாளன் வேலூர் சிறையில் விடுதலை செய்யப்பட்டார். 26 ஆண்டுகளுக்கு பின்னர் தனது சொந்த ஊரான ஜோலார் பேட்டைக்கு வந்துள்ளார். வீடு திரும்பிய பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.
ராஜீவ்காந்தி சிறை வழக்கில் 26 ஆண்டு காலம் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் தமிழக அரசு பரோல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
உடல்நலக்குறைவு
பேரறிவாளனின் தந்தைக்கும் உடல் நலம் சரியில்லை. அதே போல பேரறிவாளனுக்கும் உடல் நலமில்லை. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று அவருக்கு ஒரு மாத காலம் பரோல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
பரோலில் விடுதலை
இதனையடுத்து இரவு 9 மணியளவில் பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜோலார் பேட்டை எல்லையில் மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
உணர்ச்சிமிக்க வரவேற்பு
26 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான ஜோலார் பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார் பேரறிவாளன். பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனை அவரது தயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், சகோதரி உறவினர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
ஆரத்தி எடுத்த அற்புதம்மாள்
26 ஆண்டுகாலம் சிறையில் கழித்த மகன் முதன் முறையாக பாரோலில் வந்ததை அடுத்து உணர்ச்சி பெருக்கோடு காணப்பட்டார் அற்புதம்மாள். பேரறிவாளனுக்கு உறவினர்கள் ஆரத்தி எடுத்து உச்சி மோர்ந்து வரவேற்றனார்.
சொந்த வீட்டில் உறக்கம்
26 ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ள பேரறிவாளனைக் காண ஊர்மக்கள் அனைவரும் திரண்டுள்ளனர். கால் நூற்றாண்டு கழித்து பெற்றோருடன் சாப்பிட்டு உறங்கப் போகிறார் பேரறிவாளன்.
நிபந்தனைகள்
ஒருமாதகாலம் பரோலில் விடுதலையான பேரறிவாளன் தினசரி ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறையில் கொடுத்துள்ள முகவரியில்தான் தங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.