சென்னை : தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இந்த ஆண்டு இளைஞர்களின் முயற்சியில் பசுமை விநாயகர், கிரீன் விநாயகர் என்ற பெயரில் விதை விநாயகர் சிலைகள் வலம் வரத் தொடங்கியுள்ளன.
இயற்கையை பகைத்துக் கொண்டால், பகைத்தவர்களுக்குத் தான் நஷ்டம் என்பதை பருவநிலை மாற்றங்கள் உணர்த்தியுள்ளன. உணவு, சமையல் முறை, இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சி என்று அனைத்திலும் பாரம்பரியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
அதே வழியில் நீர்நிலைகளுக்கு ஊறு ஏற்படுத்தாத மரம் வளர்ப்பையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சந்தையில் வலம் வருகிறது ‘விதை விநாயகர்’.
விநாயகர் சிலைகள்
வழக்கமாக விநாயகர் சதுர்த்தி என்றால் விதவிதமான நிறங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி, வீட்டில் வைத்து பூஜை செய்து மூன்றாவது நாள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். கவர்ச்சிக்காக, பல ரசாயனங்களை சேர்த்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசடைகின்றன.
விதை விநாயகரின் சிறப்பு
எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அதே சமயம் வருங்காலத் தலைமுறையினருக்காக புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ‘விதை விநாயகர்’ சிலைகள் இந்த ஆண்டு மாநிலத்தின் பல பகுதிகளில் தயாரித்து விற்கப்படுகின்றன. களிமண் கொண்டு எளிமையாக தயாரிக்கப்படும் இந்த சிலைக்குள் இருக்கும் சில விதைகள் புதைக்கப்படுகின்றன. நீர்நிலைகளில் கரைக்கும் போதோ அல்லது தொட்டிக்குள்ளேயே வைத்து கரைத்தாலோ விநாயகர் சிலை கரைந்து அதில் இருக்கும் விதை நாளை விருட்ச மரமாக வளர்ந்து பயனளிக்கும் என்பதே இதன் சிறப்பு.
விழிப்புணர்வு முயற்சி
கோவையைச் சேர்ந்த ‘சோ அவேர்’ என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த பணியை செய்து வருகின்றனர். மரம் நடுதல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தப் பணியை செய்து வருவதாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே இந்த சேவையை செய்து வரும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
நகரவாசிகளுக்கு பிரத்யேக விதைகள்
அபார்ட்மென்ட்டில் வாழும் நகர வாசிகளுக்கு ஏற்ப, சிலையில், தக்காளி, துளசி, வெண்டை, பச்சைமிளகாய், முருங்கை, பப்பாளி உள்ளிட்ட விதைகளை வைத்துத் தருகின்றனர். சதுர்த்தி முடிந்தவுடன் வீட்டின் வெளியே வாலி அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் வைத்தால் அதில் இருக்கும் களி மண் கரைந்து விடும். பின் அதனைச் சூரிய வெளிச்சத்தில் வைத்தால் ஒரு வாரத்திலேயே அதனுள் இருக்கும் விதை முளைக்கத் தொடங்கிவிடும். வீட்டு தோட்டத்திலும் கரைக்கலாம்.
நீர்நிலைகளுக்கு சிறப்பான சிலைகள்
ஆறு, குளம், குட்டைகளில் கரைக்க விரும்புவோருக்காக பிரத்யேக சிலைகள் உள்ளன. இதில், விதைகள், மீன்கள், பறவைகள் உட்கொண்டு பயன்பெறும் வகையில், மக்காச்சோளம், கோதுமை, ரவை, அவல் உள்ளிட்டவைகளை இணைக்கப்பட்டுள்ளன.
கைகோர்ப்போம் வாருங்கள்
இதே போன்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் களிமண் பசுமை விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இளம் தளிர் அமைப்பு பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து இந்த முயற்சியை செய்கிறது.
விழிப்புணர்வு
இது குறித்து முகநூலில் அவர்கள் பதிவிட்டுள்ள செய்தியில்….வழக்கமாக விநாயகரை பூஜை செய்து 3 ம் நாள் நீர்நிலைகளில் கலப்போம்… அதனால் நீர்நிலைகள் மாசு அடையும்… அதை தவிர்க்கவும், நம் ஊரை பசுமையாக்கும் விதமாக இவ்வருடம் விதை விநாயகர் வாங்கி 3 ம்நாள் மரங்கள் இல்லாத பகுதிகளில் வைத்து விட்டால் மழையில் அதுவே கரைந்து விதைகள் முளைக்கும்….நமது ஊரை பசுமையாக்குவோம் வாருங்கள் கைகோர்ப்போம்………. என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.