பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார் ஒரு சாமியார்.
தனது பக்தைகள் இரண்டு பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று சண்டீகர் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பஞ்சாபிலும் ஹரியானாவிலும் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
யார் இந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்?
ராஜஸ்தானில் 1967ம் ஆண்டு பிறந்த குர்மீத் ராம் ரஹீம் சிங்தான் இப்போது இரண்டு மாநிலஙகளை பதற்றப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
1990ம் ஆண்டு தனது ஆதரவாளர்களை கூட்டி, ஒரு ஆன்மீக சங்கத்தை தொடங்கினார். டேரா சச்சா சவ்தா என்ற அந்தச் சங்கத்தை கையில் வைத்துக்கொண்டு தன்னை முன்னிலைப்படுத்தி ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்.
1999ம் ஆண்டு ஒரு தனது ஆசிரமத்தில் தன்னுடைய பக்தையாக இருந்த பெண்ணை கற்பழித்ததாக இவர் மீது புகார் வந்தது. 2002ம் ஆண்டு இவருடைய ஆசிரமத்தில் இருந்த இன்னொரு பெண் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.
தன்னை தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதாக அந்தப் பெண் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அப்போதிருந்து பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி தன்னை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவர் நடத்திய ரத்ததான முகாம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
தூய்மைத் திட்டத்தில் அதிகமாக பங்கெடுத்தார். பஞ்சாப், டெல்லி, பிகார் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் பாஜகவை ஆதரித்து தீவிரமாக செயல்பட்டார்.
1லட்சத்து 50 ஆயிரத்து 9 எண்ணெய் விளக்குகளை ஏற்றுவது, 77 ஆயிரத்து 723 கிலோ காய்கறிகளைக் கொண்டு 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் அலங்கார கோலம் உருவாக்கியது என பல நிகழ்வுகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
ஹிண்ட் கா நபாக் கோ ஜவாப் என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கி, இசையமைத்து என 43 விதமான பங்களிப்பு செய்திருக்கிறார். இதற்காக அந்தப் படம் ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்சில் இடம்பெற்றுள்ளது.
பெண்களுக்கான கல்லூரியை 6 நாட்களிலும், மாணவிகளுக்கான விடுதியை 42 நாட்களிலும், 2 லட்சம் சதுர அடி பரப்புள்ள பெரிய அரங்கத்தை 35 நாட்களிலும், 175 படுக்கை வசிதியுள்ள மருத்துவமனையை 17 நாட்களிலும், ஒரு ஆசிரமத்தை 5 நாட்களிலும் கட்டி முடித்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
ஆனால், ஆடம்பர சாமியாராக கருதப்படும் குர்மீ்த ராம் ரஹீம் சிங் இரண்டு பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி என்று பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இப்படிப்பட்ட ஒரு குற்றவாளி. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் 100 வாகனங்களில் ஆதரவாளர்களோடு வந்திருக்கிறார். நீதிமன்றம் உள்ள பகுதிகளில் அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கிறார்கள்.
இவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வன்முறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வன்முறைக் கும்பலை சேர அனுமதித்தது ஏன் என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.
இரண்டு மாநில அரசுகள் தங்கள் மாநிலங்கள் வழியாக பயணிக்கும் பயணிகள் ரயில்களை ரத்து செய்யும்படி கேட்டிருக்கின்றன. இரண்டு கிரிக்கெட் மைதானங்களை சிறையாக அறிவித்துள்ளன.
15 கம்பெனி துணை ராணுவம் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் பஞ்சாபில் ரயில்நிலையத்துக்கும். வாகனங்களுக்கும் தீ வைத்து வெறியாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இதிலிருந்தே இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் சாமியாரில்லை என்பதும், மக்களையும் நீதித்துறையையும் மிரட்டுகிற ஒரு தாதா என்பது மட்டும் தெரிகிறது.
– ஆதனூர் சோழன்