காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல்: 5 பாதுகாப்பு படையினர் உள்பட 7 பேர் பலி

Kashmir-Mapஇந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஐந்து இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மூன்று காவல் துறையினர், இரண்டு துணை ராணுவப் படையினர் மற்றும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு – காஷ்மீர் மாநில காவல் துறை தலைவர் எஸ்.பி.வைத் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒரு கட்டடத்தில் இருந்து வெளியே வந்த தீவிரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதாகவும் அந்த இடத்திலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் எஸ்.பி.வைத் தெரிவித்தார்.

இரு தரப்பினர் இடையே இன்னும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தில் ஒன்பது பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேரின் நிலை மோசமாக உள்ளது.

சனிக்கிழமை காலை 03.45 மணிக்கு புல்வாமாவின் காவல் தலைமையகத்தினுள் நுழைந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதோடு துப்பாக்கிகளாலும் சுட்டுள்ளனர்.

கடந்த ஏழு மாதங்களில் மட்டும், 140 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ள, ‘ஆபரேஷன் ஆல் அவுட்’ (Operation All Out) என்ற பெயரில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ராணுவம் தொடங்கிய நடவடிக்கைக்கு பழி வாங்கும் விதமாக நடந்ததாக, இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

இது இந்த ஆண்டின் மூன்றாவது தற்கொலைத் தாக்குதல் என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிணைக் கைதிகளாக யாரும் பிடிக்கப்படுவதைத் தடுக்க, அவ்வளாகத்தில் இருந்த காவல் துறையினரின் குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்பேசி சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. -BBC_Tamil

TAGS: