மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.16 கோடி(RM 1.07 கோடி) செம்மரக் கட்டைகள் பறிமுதல்

semmaramm

சென்னையிலிருந்து கடல் மார்க்கமாக மலேசியாவுக்குக் கடத்தப்படவிருந்த 16 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.

ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் சுமார் 40 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

துணிகள், தரைவிரிப்புகள் இருப்பதாக கூறப்பட்ட சில கண்டெய்னர்களை ஆய்வுசெய்ததில் அவற்றில் செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னைத் துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்னர்கள் சரக்குப் பெட்டக மையங்களில் சோதிக்கப்பட்டு, மூடி முத்திரையிடப்படுகின்றன. அந்த முத்திரையுடன் இருக்கும் கண்டெய்னர்கள் கப்பல்களில் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால், சரக்குப் பெட்டக மையங்களில் இருந்து துறைமுகத்தை நோக்கிச் செல்லும் வழியில், இந்த கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டு, உள்ளே இருக்கும் பொருட்கள் மாற்றப்பட்டு அவற்றில் செம்மரக்கட்டைகள் ஏற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து, மலேசியாவின் க்லாங் துறைமுகத்திற்கு செல்லவிருந்த கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்ட ஒரு கண்டெய்னரை சோதித்தபோது, அவற்றில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகள் இருந்தன.

மேலும் இரண்டு கண்டெய்னர்கள் இதேபோல செம்மரக்கட்டைகளுடன் வரும் தகவலறிந்து சோதனையில் ஈடுபட்ட மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், அந்த கண்டெய்னர்களை அடையாளம் கண்டு சோதனையிட்டபோது அவற்றில் ஒரு கண்டெய்னரில் 15 டன் கட்டைகளும் மற்றொரு கண்டெய்னரில் 11 டன் கட்டைகளும் இருந்தன.

இவற்றின் மொத்த மதிப்பு 11 கோடி ரூபாய்.

கப்பலில் ஏற்றப்பட்டிருந்த மற்றொரு கண்டெய்னர் சோதனையிடப்பட்டதில் அதில் 3.6 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 டன் கட்டைகள் பிடிபட்டன.

இந்த நான்கு கண்டெய்னர்களிலும் சேர்த்து சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் கட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கடத்தல் முயற்சியின் பின்னால் உள்ள நபர்களைத் தேடும் பணிகள் தற்போது நடந்துவருவதாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Pterocarpus santalinoides என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட செம்மரங்களை வெட்டுவதும், ஏற்றுமதி செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் தென்னிந்தியப் பகுதிகளில் இருந்து இந்த மரங்கள் தொடர்ந்து வெட்டி, கடத்தப்படுகின்றன.

ஆந்திராவின் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் உள்ள சேஷாச்சலம், பாலகண்டா வனப்பகுதிகளில் பிரதானமாக இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன.

அனந்த்பூர், கர்னூல், பிரகாசம், நெல்லூர் போன்ற ஆந்திராவின் பிற மாவட்டங்களிலும் ஆந்திராவை ஒட்டிய தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் இவ்வகை மரங்கள் சில இடங்களில் வளர்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையின் சென்னைப் பிரிவு, 71 கோடி மதிப்புள்ள 176 டன் செம்மரக் கட்டைகளை மீட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டுவதற்காகச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் அம்மாநில காவல்துறையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் இம்மாதிரி மரம் வெட்டும் முயற்சியில் ஈடுபட்ட 20 தொழிலாளர்கள் ஆந்திர மாநில செம்மரக் கட்டை கடத்தல் தடுப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். -BBC_Tamil

TAGS: