தாஜ்மகால் சிவன் கோயிலா? கல்லறையா? முதன்முறையாக மத்திய அரசு தகவல்

taj-mahalஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் ஒரு கோயில் அல்ல என்றும் அது ஒரு கல்லறை என்றும் ஆக்ரா நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு முதன்முறையாக தெரிவித்துள்ளது.

“12ஆம் நூற்றாண்டில் ராஜா பரமார்தி தேவ் என்பவரால் தஜோ மஹாலாயா (சிவன்) கோயில் கட்டப்பட்டது. பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான் சிங் வசமானது. அவருக்குப் பிறகு 17-ம் நூற்றாண்டில் ராஜா ஜெய் சிங் நிர்வகித்து வந்தார்.

அதன் பிறகு 1632-ல் ஆட்சி புரிந்த ஷாஜஹான் இந்தக் கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பின்னர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் இறந்த பிறகு, அந்தக் கோயிலை மனைவியின் நினைவிடமாக மாற்றினார். இந்தக் கோயில்தான் தாஜ்மகால் என அழைக்கப்படுகிறது.

எனவே, கோயிலுக்குள் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்” என கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் ஹரிசங்கர் ஜெயின் உள்ளிட்ட 6 வழக்கறிஞர்கள் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு, கலாச்சார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வு மையம் தனது பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில்,

“வரலாற்று ரீதியாகவும் ஆவணங்களின் படியும், யமுனை ஆற்றின் கரையில் உள்ள ஆக்ராவில் பழங்கால நினைவுச் சின்னமான தாஜ்மஹால் மட்டுமே அமைந்துள்ளது. இது சர்வதேச அளவில் 7ஆவது உலக அதிசயமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷார் ஆட்சியில் 1920 டிசம்பர் 22ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தாஜ்மஹால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என கூறப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் கூறியிருப்பது போல தாஜ்மஹால் பகுதியில் சிவன் கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மனுதாரரின் புகார் அடிப்படை ஆதாரமற்றது. கற்பனையானது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்த மனுவை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 11ஆம் திகதி நடைபெறும் என்றும், மத்திய அரசின் பதில் குறித்து தங்கள் நிலைப்பாட்டை அப்போது தெரிவிக்குமாறும் மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 -tamilwin.com
TAGS: