இந்தியா மற்றும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாம் பகுதி தொடர்பான பிரச்சினை இந்தியா–சீனா இடையே கடந்த 2 மாதமாக நிலவி வருகிறது. சீன அரசும், ஊடகங்களும் இந்த பிரச்சினையை பெரிதாக்கியுள்ளன.
இந்நிலையில், குறித்த பிரச்சினை தொடர்பில் இந்தியா நிதானமாகவும், உறுதியாகவும் செயல்படுகிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா–சீனா இடையேயான எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருவது கவலை அளிப்பதாகவும், இதன் மூலம் பூட்டான் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச எல்லை சட்டத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இரு நாடுகளும் எல்லை விவகாரத்தில் எவ்வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு நாட்டு எல்லை பிரச்சினை குறித்து நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நட்பு நாடான இந்தியாவுடன் இது தொடர்பாக ஆலோசனையும் நடத்துகிறோம்.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இந்தியாவிடம் இருந்து இதுவரை அது போன்ற கோரிக்கை எதுவும் எங்களுக்கு வரவில்லை எனவும், எல்லையில் அமைதி திரும்ப அமெரிக்கா கண்டிப்பாக ஆதரவளிக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-tamilwin.com