மும்பை: மும்பையில், கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இன்றும் கன மழை தொடருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலிலும் சீற்றம் காணப்படுகிறது. நேற்று மாலையில் அதிகபட்சமாக 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது.
விமானங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கும் சூழல் உள்ளதால் பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிவிக் அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன.
மூன்று இடங்களில் மரங்கள் விழுந்துள்ள சம்பவங்களும், 5 இடங்களில் மின்சார ஷாக் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 3 இடங்களில் வீடுகளில் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று கொண்டு உள்ளன, இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.