60 குழந்தைகள் பலியான சம்பவம் உ.பி. அரசு மருத்துவ கல்லூரி முதல்வர், மனைவியுடன் கைது

khஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உ.பி. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, கடந்த 12-ந் தேதி, அந்த மருத்துவ கல்லூரியின் முதல்வர் ராஜீவ் மிஸ்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே நாளில் அவர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தார்.

ஆஸ்பத்திரியின் மூளை வீக்க நோய் பிரிவுக்கு பொறுப்பு அதிகாரியான கபீல் கானும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 9 பேர் மீது வழக்கு பதிவு

மாநில அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அக்குழு அறிக்கையின் அடிப்படையில், மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஸ்ரா, அவருடைய மனைவியும், டாக்டருமான பூர்ணிமா சுக்லா, டாக்டர் கபீல் கான் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் விசாரணை நடத்த சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

 கைது

இந்நிலையில், பதவி விலகிய மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஸ்ரா, அவருடைய மனைவி பூர்ணிமா ஆகியோர் ஒரு வக்கீலுடன் ஆலோசனை நடத்துவதற்காக, நேற்று கான்பூருக்கு சென்றிருந்தனர். அங்கு அவர்களை சிறப்பு தனிப்படை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

அவர்களை விசாரணைக்காக கோரக்பூருக்கு அழைத்து சென்றனர். பூர்வாங்க விசாரணைக்கு பிறகு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல், டாக்டர் கபீல் கானை விசாரணைக்கு அழைப்பதற்காக, அவரது வீட்டுக்கு மற்றொரு போலீஸ் குழு சென்றது. ஆனால், அப்போது அவர் வீட்டில் இல்லாததால், அவர் வந்தவுடன் அனுப்பி வைக்குமாறு அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர்.

-dailythanthi.com

TAGS: