பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கடந்தமாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டில் முதன் முதலாக தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி திலீப் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் 2-வது முறையாக கேரள ஐகோர்ட்டில் நடிகர் திலீப் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சுனில் தாமஸ் நேற்று விசாரித்தார். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வக்கீல் முக்கிய ஆதாரங்களை மூடி முத்திரையிட்ட உறை ஒன்றில் வைத்து நீதிபதியிடம் அளித்தார். இதை பரிசிலீத்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தார்.
அப்போது நீதிபதி கூறுகையில், “இந்த வழக்கின் மீதான விசாரணை இன்னும் முடியவில்லை. மேலும் நடிகர் செல்வாக்கு உள்ளவர் என்பதால் ஜாமீனில் விட்டால் சாட்சிகளை அவர் கலைக்கக் கூடும் என்ற அரசு தரப்பு வக்கீலின் வாதத்தையும் கோர்ட்டு ஏற்றுக் கொள்கிறது. எனவே இதில் முந்தைய நிலையில்(முன்பு ஜாமீன் மறுக்கப்பட்டதில்) எந்த மாற்றமும் கிடையாது“ என்றார்.
-dailythanthi.com