சென்னை: அனிதாவின் மரணத்துக்கு நீதிக் கேட்டு அரியலூர், மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக தனது உயிரை தியாகம் செய்து போராட்டத்திற்கு திரியாகியுள்ளார் அரியாலூர் அனிதா.
அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் என்ற கிராமத்தில் பிறந்த அனிதாவின் கனவு மருத்துவர் ஆக வேண்டும் என்பதே. உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வுக்கு எதிராக போராடினார். அவரின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்றது. மருத்துவம் படிக்க முடியவில்லையே என்று மனமுடைந்த மாணவி அனிதா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நீதி கோரி போராட்டம்
அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திருச்சியில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதாவின் புகைப்படத்தை ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் போராட்டம்
மதுரையில் மாணவர் அமைப்புகள் சார்பில் பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள கட்ட பொம்மன் சிலை முன்பு திடீர் சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பெரியார் பஸ் நிலைய பகுதியில் 1 மணிநேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடியடி கைது
போராட்டம் தொடர்ந்ததால் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மறியல் செய்த பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீட் எதிர்ப்பு போராட்டம்
அடங்கிக் கிடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு திரியாகியிருக்கிறாள் மாணவி அனிதா. அனிதாவின் மரணம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கோவை ரயில் நிலையத்துக்குள் சென்று ரயிலை மறிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 14 பேரை கைது செய்தனர்.
கொந்தளிப்பான மனநிலை
பொள்ளாச்சி காந்தி சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயக்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மாணவி அனிதாவுக்கு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயக்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மாணவி அனிதாவுக்கு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நெல்லையில் அஞ்சலி
நெல்லையில் இந்திய இளைஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அனிதா படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாளை வ.உ.சி.மைதானத்திற்கு திரண்டு வருகிறார்களா என போலீசார் கண்காணித்தனர். இதற்காக வ.உ.சி. மைதானத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.