நீட் தேர்வினால் வைத்தியராகும் கனவை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடல் நேற்று சனிக்கிழமை 11.00 மணிக்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்த மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
‘நீட்’ தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவர்களில் அனிதாவும் ஒருவர். இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவரது தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் இறந்து விட்டார். சிறு வயது முதலே அனிதாவுக்கு வைத்தியர் ஆக வேண்டும் என்று ஆசை.
தந்தையின் குறைந்த வருமானத்தில் தனியார் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 1200இற்கு 1176 மதிப்பெண் பெற்றார்.
மருத்துவ கட்-ஓப் 196.75 என்பதால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
ஆனால் ‘நீட்’ தேர்வில் அவருக்கு 700இற்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அவரது வைத்தியர் கனவு தகர்ந்து விட்டது.
வைத்தியருக்கு படிக்க இடம் கிடைக்கவில்லை என்றாலும், வேளாண் படிப்பு படித்து விவசாயம் செழிக்க பாடுபடுவேன் என்று கூறி மனதை தேற்றி வந்தார். ஆனாலும் உள்மனதில் வைத்தியர் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு தரப்பில் அவரது குடும்பத்திற்கு ஏழு லட்ச ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை முடிந்து அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான குழுமூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அரசியல் கட்சிகளை சேர்ந்த பல தலைவர்களும் நேரில் வந்து மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர், சுமார் 11.00 மணியளவில் அனைத்து இறுதிச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்போடு அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு அனிதாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது.
இதில் மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின், திருமாவளவன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.