கருப்புப் பணத்தை வெளிகொண்டுவருவதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோதி, கடந்த ஆண்டு அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஏதுவும் பலன் தரவில்லை என்று செய்திகள் வெளியானபின்னரும் இந்தியர்கள் யாரும் கோபப்படவில்லை.
புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவீத மதிப்பைப் பெற்றிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபின், உலகின் ஏழாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையும் வங்கிகளில் வரிசையில் நிற்கும் சூழல் நிலவியது.
கிட்டத்தட்ட எல்லாப் பரிவர்த்தனைகளும் பணம் மூலம் நடந்ததால் எல்லோரும் பாதிக்கப்பட்டனர். வியாபாரம் தடைபட்டது. அன்றாட வாழ்க்கை பாதித்தது. பலருக்கும் உணவுப் பொருட்கள் வாங்கக்கூட காசில்லாமல் போனது.
பண மதிப்பு நீக்கத்திற்குப் பின் வேலை இழந்த, வெளிமாநிலங்களில் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து வேலை செய்யும் இந்தியாவின் கோடிக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது தங்களுக்கு இப்படி ஒரு ஆதரவற்ற நிலை வரும் என்றும். தங்கள் குழந்தைகள் பட்டினி கிடக்கும் என்றும் நினைத்துப்பார்க்கவில்லை என்று கூறினார்.
“நாளை என் மகளுக்குத் திருமணம். ஆனால், திருமணச் செலவுகளுக்கு என்னிடம் கொஞ்சம் கூடப் பணமில்லை,” என்று ஏக்கத்துடன் கூறினார் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தந்தை.
செல்லாப் பண அறிவிப்புக்குப் பின்னர், கோடி கணக்கான மக்கள் மோசமான பாதிப்புக்கு ஆளானார்கள். ஆனால், கருப்புப் பணம் எதுவும் ஒழியவில்லை. புழக்கத்தில் இருந்த பணம் மொத்தமும் வங்கிகளுக்கே திரும்ப வந்துவிட்டது, எனவே புழக்கத்தில் கருப்பு பணம் இல்லை அல்லது கருப்புப் பணம் ரூபாய்த் தாள்களாக பதுக்கப்படவில்லை என்பது தெளிவானபின், அரசுக்கு எதிரான விளைவுகள் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அத்தனை இன்னலுக்கும் ஆளான மக்கள் ஏன் அரசுக்கு எதிராகக் கோபப்படவில்லை?
முதல் காரணம், இந்த நுட்பமான புள்ளி விவரங்களைப் புரிந்து கொள்வது அவர்களுக்கு கடினமாக இருந்தது. வெளிப்படையாகச் சொல்லப்போனால் அந்த விவரங்கள் அவர்களுக்கு அலுப்பைத் தந்தது.
அந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான செய்தி இணைய தளங்களைத் தான் ஆராய வேண்டியிருந்தது. முன்னணி நாளிதழ்களின் முக்கியச் செய்திகளில் அது மிகவும் அரிதாகவே இடம்பெற்றது.
மக்கள் கோபப்படாமல் இருப்பதற்குக் கூறப்படும் இன்னொரு விளக்கம், செல்லாப் பண அறிவிப்பு ஏழைகள் சார்பாக பணக்காரர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகப் பார்க்கப்பட்டது.
இந்த சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “ஏழைகளை ஏமாற்றி ஊழலில் ஈடுபடுபவர்கள், நிம்மதியாகத் தூங்க முடியாது,” என்றார்.
“பண மதிப்பு நீக்கத்தால் இந்த நாட்டில் யாரும் ஏமாற்ற முடியாது. எல்லோரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்,” என்று அவர் பேசினார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல்கள் அந்நடவடிக்கை கருப்புப் பண ஒழிப்பில் பலன் அளிக்கவில்லை என்பதைக் காட்டினாலும், மோதியின் செய்தியே மக்களை அதிகம் போய் சேர்ந்தது.
இன்னொரு வகையில், இந்த நடவடிக்கை திட்டமிட்டபடி பலன்களைத் தரவில்லை என்பதை உணர்ந்த இந்திய அரசு அதன் அழுத்தத்தை திசை திருப்பியது.
நவம்பர் 8, 2016 அன்று வெளியான அறிவிப்பின்போது பேசிய பிரதமர் மோதி, “ஊழல், கருப்புப் பணம், தீவிரவாதம் ஆகியவை நாட்டை வதைக்கும் காயங்களாக உள்ளன. வளர்ச்சியை நோக்கிய நமது ஓட்டத்தைத் தடுக்கின்றன,” என்று பேசினார்.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்க்கை என்று தொடக்கத்தில் கூறிய அரசு, எதிர்பார்த்த அளவை விட அதிகமான பணம் வங்கிகளுக்குத் திரும்ப வரத் தொடங்கிவிட்டதால் அதை ‘டிஜிட்டல் பொருளாதாரம்’ எனப்படும் மின்னணுப் பரிவர்த்தனைகளை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று மாற்றிக் கூறியது.
இந்தியர்களை மின்னணுப் பரிவர்த்தனைகளை நோக்கி செலுத்துவதற்கான கருவியாக இந்தத் திட்டம் எவ்வாறு விளங்குகிறது என்பதை நோக்கி விவாதம் மடை மாற்றம் செய்யப்பட்டது.
பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து வந்த புத்தாண்டிண்போது நாடு மக்களுக்கு உரையாற்றிய மோதி, மின்னணு பரிவர்த்தனைகளை நோக்கி ஒரு நேர்மறையான மாற்றம் நடந்து வருவதாகக் கூறினார்.
மின்னணுப் பரிவர்த்தனைகள் பெரும் அளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், சர்வதேச நாணய நிதியம் முன்பு கணித்திருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் குறைத்தது.
இந்தியாவில் பரவலாக உள்ள வரி ஏய்ப்பைத் தடுப்பதும் ஒரு நோக்கம் என்று பின்னாளில் கூறப்பட்டது.
இந்தியாவில் உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் பணம் மூலமே நடைபெறுவதால், இங்கு வரி ஏய்ப்பு செய்வது எளிதாக இருந்தது. 2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி இந்திய மக்கள் தொகையில் 1% பேர் மட்டுமே வருமான வரித் தாக்கல் செய்திருந்தனர்.
பண மதிப்பு நீக்கத்தின்பின் இது அதிகரித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 5 வரை வருமான வரித் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்தை விடவும் அதிகம். கடந்த ஆண்டு இது சுமார் 22 லட்சமாக இருந்தது.
அலுப்பையும் அரசியல் காரணங்களையும் தாண்டி, இத்திட்டத்தின் குறைபாடுகள் பற்றி இந்திய மக்கள் கோபப்படாமல் இருக்க இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது.
உண்மையில், பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், மிகவும் மோசமான இன்னல்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. இந்தியா போன்ற ஒரு வறுமை அதிகம் நிலவும் நாட்டில், எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அரசின் திட்டங்கள், வேலை செய்ததா இல்லையா என்பதைப்பற்றி சிந்திப்பதை விடவும் பெரும்பாலான மக்களுக்கு வாழ்வில் அழுத்தம் தரக்கூடிய இன்னும் பல விடயங்கள் உள்ளன. -BBC_Tamil