லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத் அரசு மருத்துவமனையிலும் ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தலைமை மருத்துவர், கண்காணிப்பாளர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் மடிந்து போவது தொடர் சம்பவங்களாகி வருகின்றன. கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அண்மையில் 63 குழந்தைகள் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது.
ஆக்சிஜன் விநியோகித்த நிறுவனத்துக்கு பணம் தராததால் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியிருக்கிறது. இதனால் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்து போயுள்ளன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஃபரூகாபாத் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி இருப்பதாக மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அம்மருத்துவமனையில் தலைமை மருத்துவர், கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இடம் மாற்றப்பட்ட இருவர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.